தருணம் பார்க்கும் தருணங்கள்
தருணம் பார்க்கும் தருணங்கள், சொ.சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 320, விலை 240ரூ.
வாழ்வில் ஏற்படும் சந்தர்ப்பங்களை நாம் எத்தகைய முறையில் பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே நமது வாழ்வும் சிறப்படையும் என்பது முன்னோர் கருத்து, அதன்படி நூலின் தலைப்பு சந்தர்ப்பத்தைக் குறிக்கும் தருணம் என்ற பொருளிலே அமைந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பார்த்தது, படித்தது, கேட்டது என தனக்கு ஏற்பட்ட சமூகத் தாக்கத்தையும், அவற்றால் தனக்கு ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தையும் ஒவ்வொரு கட்டுரையில் ஆசிரியர் இலக்கிய நயத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ் நாடகங்களை அலசி ஆராயும் முதல் கட்டுரை முதல் திருக்குறளை தேசிய நூலாக்கிட இதுவே நல்ல தருணம் என்பதை வலியுறுத்தும் கடைசிக் கட்டுரை வரை அனைத்திலும் தமிழரின் பண்பாடு, கலாசாரத்தையே மையக் கருவாக்கியிருக்கிறார். திருக்குறளை குன்றக்குடி அடிகளார் வாழ்வியல் நூலாகப் பார்த்திருப்பதும், பாஜக மக்களவை உறுப்பினர் தருண் விஜய் குறளை இந்திய சமயச் சார்பற்ற தன்மையின் அடையாளமாக்கியிருப்பதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருப்பது புதிய சிந்தனை. கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், சட்டம், நவீன அறிவியல் வளர்ச்சித் தாக்கம் என 21 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழகத்தின் அகத்தையும், புறத்தையும் பல்வேறு கட்டுரைகளில் அலச முற்பட்டிருக்கிறார் நூலாசிரியர். சாய்ந்தால் சாய்கிற பக்கம் சாய்கிற செம்மறி ஆடுகளைப் போலன்றி, கலாசார மாற்றத்திலும் இயற்கையைக் காக்கும் இளங்குப்பட்டியையும் இனங்காட்டியிருப்பது சிறப்பு. நன்றி:தினமணி, 13/7/2015.