உரையியல்
உரையியல், பெ. மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 254, விலை 160ரூ.
பெண்களை ‘பா’ போட்டு அழைக்கலாமா? தமிழ் இலக்கண, இலக்கிய உலகில், உரையாசிரியர்களின் உன்னத இடத்தை, இந்த ஆய்வு நூல் விரிவாக உரைக்கிறது. அகராதியின் சொற்பொருள், உரையாசிரியர்களின் விளக்கங்கள், மூலநூலை எளிதாக்கிவிடுகின்றன. தொல்காப்பியத்திற்கு, சேனாவரையரின் உரை, மறுப்புத்திறன் மிக்க உரையும், தெய்வச் சிலையாரின் மிக எளிய உரையும், திருக்குறளுக்கு மணக்குடவர் விளக்க உரையும், நற்றிணைக்கு பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் பதிப்பும், உரைநெறிகளும், அவ்வை துரைசாமிப்பிள்ளை பதிப்பும், பாட பேதங்களும், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் ஆய்வுத்திறன்களும், சங்க இலக்கிய உரைகளும், அகராதிச் சொற்களும் இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இறைச்சிப் பொருள், உள்ளுறை உவமம் போன்ற எழுதப்படாத விளக்கங்களும், நற்றிணைப் பாடல்கள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. 14 வகையாக நன்னூல் பொதுப்பாயிரம் கூறும் ஆசிரிய வசனம், உரையியலுக்கு உயர்ந்த எடுத்துக்காட்டு ஆகும். இன்றைய நிலையில் பெண்மகளை, ஏண்டா… என்னப்பா’ என்று ஆண்பாலாக பேசுவது, அன்றே இருந்ததை ஆய்வு செய்து விளக்குகிறார் நூலாசிரியர். ‘பெண்மகன்’ என்று பெண்மகளை கொற்கை சூழ்ந்த நாட்டார் அழைத்தனர் (பக். 42). ‘உரைத்தல்’ எனும் பேச்சு வழக்கில் உள்ள சொல்லே, எழுத்து வடிவில், ‘உரை’ எழுதினான் என வந்தது. பேராசிரியர் திருக்கோவையாருக்கும், காலிங்கர் திருக்குறளுக்கும், சேனாவரையர் தொல்காப்பியம் சொல்லதிகாரத்திற்கும் எழுதிய உரைகளும், இறையனார் அகப்பொருளுக்கு எழுதப்பட்ட உரையும், ஆசிரியர் மாணவருக்குப் பாடம் கூறும் வகையில் வினா விடையாக அமைந்துள்ளன. தெய்வச்சிலையாரின் உரை, மொழிக்கு வளம் சேர்ப்பதாக ஆசிரியர் கூறுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மணக்குடவர் உரையே, திருக்குறளை தெளிவாக்குகிறது. எனவே, அவரைப் பின்பற்றி பரிமேலழகர் உரை எழுதினார். சங்க இலக்கிய உரைப் பதிப்புகள் பலவற்றை சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி பயன்படுத்தியுள்ளதில், பல சிக்கல்கள் உள்ளதை இந்த நூல் பட்டியலிட்டுள்ளது. உரை இன்றி தமிழ் இலக்கணமும், இலக்கியமும் விளங்காது எனவும், அதற்காக உரைத்து உரை தீட்டிய உரையாசிரியர் தமிழ் வளர்த்த சான்றோர் எனவும், ‘உரை’க்கு மகுடம் சூட்டுகிறது இந்த நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 6/9/2015.