ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்)

ஸ்ரீ வியாசரின் மஹாபாரதம் (3 பாகங்கள்), ஸ்வாமி, கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 1230, விலை 900ரூ.

உலக இலக்கியங்களிலே ஒப்புயர்வற்றது வியாசர் அருளிய மஹாபாரதம். இதில் இல்லாதது வேறு எதிலும் இல்லை என்னும் அளவுக்கு ஆன்மிகம், வாழ்வியல், அரசியல், உளவியல், வரலாறு, புவியியல் என அனைத்துத் தகவல்களையும் தன்னகத்தே கொண்டது. இப்போது வெளிவந்துள்ள இந்நூல், காலவோட்டத்துக்குத் தகுந்தபடி, நவீன காலத்துக்கு ஏற்ப நன்கு தொகுக்கப்பட்டுள்ளது. நூலாசிரியரின் சில விளக்கங்கள் ரசனையை மெருகேற்றுகின்றன. ‘ஜய’ என்ற சொல் மஹாபாரதத்தைக் குறிக்கும் சங்கேதச் சொல் என்பதைச் சிறப்பாக விளக்கியுள்ளார். மேலும், புராதன மஹாபாரத்தில் விஞ்ஞானக் கருத்துகள் மலிந்திருப்பதை ஆங்காங்கே நட்சத்திரக் குறியீடு இட்டு, கீழே விளக்கியிருக்கிறார். சூரியன் தேரோட்டி அருணன் என்பதை ஓஸோன் படலம் என்றும், பெண்ணாகப் பிறந்த சிகண்டி ஆணாக மாறியதை தற்கால பால்மாற்று அறுவைச் சிகிச்சைக்கும் ஒப்பிட்டும் கூறியிருக்கிறார். பிடிவாதமாக கடவுள் இல்லை என்பவனும், தெய்வமே எல்லாம் என்பவனும் வஞ்சனை புரிபவரே என்று பிருகஸ்பதி நீதியில் கூறப்படுவது. பிறப்பால் சாதி இல்லை, செயல், குணம் இரண்டை வைத்தே சாதி என்று பீமனுக்கு ஹனுமார் எடுத்துரைப்பது. சொர்க்கமும் நரகமும் இங்கேதான் என்று அனுகீதையில் கூறப்படுவது ஆகியவை இந்த நூலில் நன்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பிரும்மம் என்றால் என்ன, பிரமாணமாகக் கொள்ளத்தக்கவை யாவை, விதி – முயற்சியின் வித்தியாசம் ஆகிய விளக்கங்கள் பாராட்டத்தக்கவை. நள-தமயந்தி கதை, யயாதி கதை, துஷ்யந்தன் – சகுந்தலை கதை உள்ளிட்ட உபகதைகளும் சுருக்கமாக அதே நேரத்தில் சுவையாகத் தரப்பட்டுள்ளன. பகவத் கீதை சுருக்கம், விதுர நீதி மட்டுமின்றி, மலைப்பாம்பாகிய நகுஷன் எழுப்பும் வினாக்கள், தடாகத்தில் இருக்கும் யக்ஷனாகிய தர்மதேவதை கேட்கும் கேள்விகள் அவற்றுக்கு தருமர் தரும் பதில்கள் ஆகிய அறக்கோட்பாட்டு அலசல்கள் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டியவை. மஹாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில் இடம் பெற்றுள்ள சிவ சஹஸ்சரநாமத்தைப் பற்றி நூலாசிரியர் ஒன்றுமே குறிப்பிடாமல் விட்டிருப்பது வியப்பளிக்கிறது. மேலும், மூலத்தைவிட சற்று தூக்கலாகவே விஷ்ணு பரமாக நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தோற்றம் ஏற்படுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. வங்கத்தைச் சேர்ந்த தாமிரலித்திகள்தான் தமிழர்கள் என்பன போன்ற ஊகக் கருத்துகள் கொடுக்ககப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். மேலும், இந்த நூலின் தொடக்கத்தில் கலியுகத்தின் முடிவாக மஹாபரதம் உள்ளது என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. துவார யுகத்தின் முடிவாக என்றிருக்க வேண்டும். மறுபதிப்பில் சரிசெய்யவும். பன்முகம் காட்டும் பாரதத்தை நன்முகமாகத் தந்திருக்கும் இந்நூல் வரவேற்புக்குரியது. நன்றி:தினமணி, 13/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *