வீழியும் காழியும்
வீழியும் காழியும், சண்முக. செல்வகணபதி, செ. கற்பகம், தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 96, விலை 100ரூ.
திருஞானசம்பந்தர் அவதரித்த, அவருக்கு அம்மையப்பராகத் தோணியப்பர் காட்சி அளித்த சீகாழி என்கிற சீர்காழியும், திருமால் நாள்தோறும் ஆயிராம் தாமரை மலர்களால் சிவபெருமானை அர்ச்சித்து சக்கராயுதம்பெற்ற திருவீழிமிழலையும் தேவாரப் பாடல் பெற்ற சிறப்புக்குரிய தலங்களாகும். காழிபாதி வீழிபாதி என்னும் வழக்காறு பெற்ற திருத்தலம் திருவீழிமிழலை. திருஞானசம்பந்தரும் அப்பரடிகளும் படிக்காசு பெற்று, மக்களின் பஞ்சத்தைப் போக்கிய பஞ்சம் துர்த்த தலமாகவும், ஞானசம்பந்தருக்கு சீர்காழி தோணியப்பர் திருக்கோலத்தை இந்த வீழியில் காட்டியருளிய தலமாகவும், திருமாளிகைத் தேவர் ஓடாத தேரினை தானே ஓடும்படிச் செய்த தலமாகவும் சிபிச் சக்கரவர்த்தி வழிபட்ட தலமாகவும், பன்னிரு திருமுறைகளில் 25 பதிகங்களைப் பெற்று விளங்கும் தலமாகும் வீழி திகழ்கிறது. ஊழிக்காலத்திலும் அழியாமல் இருக்கும் ஒரே திருத்தலம் சீர்காழிதான் என்பது ஐதீகம். இந்தச் சீர்காழியின் பெருமையோ கணக்கில் அடங்காதது. இவ்விரு தலங்களின் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம், கோயில் அமைப்பு, வழிபட்டோர், வழிபாட்டின் பலன், திருக்குடமுழுக்கு, கல்வெட்டுச் செய்திகள், இலக்கணப் பதிவுகள், தலபுராணம், இசைச்சிறப்பு, இசைப்பாடல் அமைதி, பஞ்சபுராண வழிபாடு, பண்களும் கட்டளைகளும் வீழியும் காழியும் ஒப்புமை, இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள் என இத்தலங்களின் சிறப்புகளும் பெருமைகளும், பரிகாரப் பலன்களும் ஒரு சேரப் பதிவு செய்யப்பட்டு, பக்தி இலக்கியத்திற்குக் கிடைத்த ஓர் ஆவணப் பதிவுகத் திகழ்க்கிறது. இவ்விரு தலங்களையும் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் நூல். நன்றி: தினமணி, 24/8/2015.