பிளேட்டோவின் குடியரசு
பிளேட்டோவின் குடியரசு, தமிழாக்கம் ஆர். இராமானுஜாசாரி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 412, விலை 230ரூ.
மண்ணிலேயே விண்ணரசு ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பிளேட்டோவின் குடியரசு. சாக்ரடீஸ் தன்னுடைய மாணவர்களுடன் நடத்தும் உரையாடல்தான் இந்த புத்தகம். இந்த உரையாடல்கள் மூலம் ஒரு சிறந்த குடியரசுக்கான அடிப்படை எவை, அவை எவ்வாறு அமையும், அதில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள், காவலர்கள், தகுதிகள் என்ன? அத்தகைய குடியரசில் இளைஞர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இத்தகைய குடியரசில் எவை தீமைக்கு இடம் அளிக்கும், எவை நன்மையைச் சேர்க்கும், எத்தகைய சிறு தவறுகள் மெல்ல மெல்ல வளர்ந்து நாட்டையே சீரழிக்கும் என எல்லாவிதமான விவாதங்களும் நடத்தப்படுகின்றன. ஒரு குடியரசுக்கான தன்மை முழுமையாக அலசப்படுகிறது. தண்டனை தரும் ஆட்சிமுறைச் சட்டங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தாமல், நல்லாட்சி அமையும் சூழலுக்கே அதிக கவனம் தரப்படும் உரையாடல்கள். சாக்ரடீஸ் உரை நிகழ்த்த, மாணவர்கள் இடையிடையே கேள்விகள் (பெரும்பாலும் ஆமாம் என்கிற ஒத்திசைவுதான்) அனைத்தையும் ஒரு வாசகன் இந்த சபைக்கு வெளியே அமர்ந்து பார்வையாளனாகக் கேட்டுக் கொண்டிருக்கும் பாவனையிலேயே உரையாடல் மனத்துக்குள் விழுகிறது. 1965-இல் வெளியான புத்தகத்தின் மறுபதிப்பு. ஆனால் மொழிபெயர்ப்பு தொய்வில்லாமல் இருக்கிறது. இத்தகைய மொழிபெயர்ப்பை அந்த நாளிலேயே சாத்தியமாக்கிய ஆர். இராமானுஜாசாரி பற்றி குறிப்பு தந்திருக்கலாம். நன்றி: தினமணி, 24/8/2015.