ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, கோமல் அன்பரசன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு பற்றிய விவரங்கள் தினசரி ஊடகங்களில் வெளியிடப்பட்டன. அவை அனைத்தையும் தொகுத்து ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் எழுதியுள்ள இந்நூலை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வழக்கின் தன்மை, சட்ட விளக்கங்கள், அன்றாட நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் நடந்த சுவையான வாதங்கள் அனைத்தையும் ஒரு சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும் விதத்தில் விரிவாக அன்பரசன் எழுதியுள்ளார். 1991 முதல் 1996 ஜெயலலிதா தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தார். அப்பொழுது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன்னுடைய வருமானத்திற்குமேல் சொத்து சேர்த்தார் என்பதுதான் வழக்கு. இதைத் தவிர டான்சி வழக்கு உள்ளிட்ட 10 வழக்குகள் திமுக ஆட்சியில் தொடுக்கப்பட்டன. சுப்பிரமணியசாமி ஆளுநர் அனுமதி பெற்று வழக்கு தொடுத்தார். 18.9.96 அன்று முதல் தகவலறிக்கை போடப்பட்டது. 1991ல் பதவிக்கு வரும் முன்னதாக இரண்டு கோடியே ஒரு லட்சத்து எண்பத்து மூவாயிரம் மதிப்புள்ள சொத்து ஜெயலலிதாவுக்கு இருந்தது. 1996ல் பதவி முடிந்தவுடன் அறுபத்து ஆறு கோடியே அறுபத்து ஐந்து லட்சத்து இருபதாயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தது. முதலமைச்சராக மாதம் ஒரு ரூபாய் மட்டுமே வருமானம் இருந்தது. இதர வருமானம் ஏதும் இல்லை. எனவே இந்த சொத்துக்கள் எல்லாம் அதிகாரத்தைப் பயன்படுத்தி வாங்கப்பட்டது என்பதே வழக்கு. இந்திய வரலாற்றில் பதவியில் இருக்கும்போது தண்டனை பெற்று, பதவியை இழந்து, சிறைக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா மட்டுமே. இதர பல வழக்குகளில் இருந்து விடுதலை பெற்றாலும் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கிய வழக்கில் இருபத்து எட்டு நாட்கள் ஜெயலலிதா சிறையில் இருந்தார். சொத்து சேர்ப்பு வழக்கு மட்டும் தக்க ஆதாரங்கள் இருந்ததால் நீண்ட நாட்கள் வழக்கு நடந்தது. ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆனதால் வழக்கில் பல சாட்சிகள் ஒத்துழைக்கவில்லை. திமுக சார்பில் 2003ம் ஆண்டு இந்த வழக்கை, தமிழகம் அல்லாத வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த அடிப்படையில் வழக்கு கர்நாடகாவிற்கு மாற்றப்பட்டு, அங்குFள்ள சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. ஜெயலலிதா முதல் குற்றவாளியாகவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டுச்சதி செய்து சொத்துக்களை வாங்கியதாகவும் வழக்கு. இவர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் வசித்ததாக வாக்காளர் பட்டியலில் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. சுதாகரனை வளர்ப்பு மகனாக அறிவித்து அவருக்கு ஆடம்பரமாக திருமணம் செய்யப்பட்டது. திருமணத்திற்கு செலவழிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் வழக்கில் ஒரு அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை முறையாக நடத்தி விரைவில் முடிப்பதற்கு ஜெயலலிதா தரப்பில் பல இடையூறுகள் செய்யப்பட்டன. வழக்கு மொத்தம் 18 ஆண்டுகள் நடைபெற்றது. 160 முறை வாய்தா வாங்கப்பட்டது. இறுதியாக மைக்கேல் டி குன்ஹா என்ற நேர்மையான நீதிபதி நியமிக்கப்பட்டார். அரசு வக்கீலாக பவானி சிங் நியமிக்கப்பட்டார். இந்த காலத்தில்தான் பல்வேறு தடைகள் இருந்தாலும் வழக்கு வேகமாக நடத்தப்பட்டது. 42 வங்கிக் கணக்குகள், 8 வாகனங்கள், 21 வங்கி டெபாசிட்டுகள் 3 இயந்திரங்கள் என்று சொதுக்கள் வரிசைப்படுத்தப்பட்டு நீதிபதி கேள்விகள் எழுப்பினார். அரசு வக்கீல் பவானிசிங் குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்கு ஆதரவாக அரசுத்தரப்பு வாதம், குற்றம் சாட்டப்பவர்கள் தரப்பு வாதம் நடைபெற்று, இறுதியில் 2014 செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு என அறிவிக்கப்பட்டது. இதன் பிறகும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சுட்டிக்காட்டி, பரப்பன அக்ரகார நீதிமன்றத்திற்கு இடத்தை மாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செப்டம்பர் 27 அன்று தீர்ப்பு வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட நால்வருக்கும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அன்றே ஜெயலலிதா பதவி இழந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். அமைச்சர் பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பு ஏற்றார். அடுத்த கட்டமாக விரைவில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளிவரவும் தண்டனையை நிறுத்தி வைக்கவும். வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அஇஅதிமுக தரப்பில் முயற்சிகள் நடைபெற்றன. கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பாலி நாரிமன் வாதாடினார். நீதிமன்றம் விதிக்கும் அத்தனை நிபந்தனைகளையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து ஜாமீன் பெறப்பட்டது.  மீண்டும் ஜெயலலிதா பதவியேற்று ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான நிகழ்வுகளை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது. மேல் முறையீடு வழக்கு எப்பொழுது துவங்கும். எப்படி முடியும் என்று தெரியாது. தலைக்கு மேல் கத்தி தொங்குவது போன்ற நிலைமையில்தான் தற்பொழுது தமிழக ஆட்சி நடைபெற்று வருகிறது. கோமல் அன்பரசன் வழக்கின் எல்லா விபரங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட இதர வழக்குகள் பற்றியும் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளார். தீர்ப்பு பற்றிய பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும் இணைத்துள்ளார். சொத்துக்கள் பற்றிய முழு விபரங்களையும் பட்டியலிட்டுள்ளார். விறுவிறுப்பான நடையில், சம்பவங்களைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். வழக்கு பற்றிய முழு விபரங்களை அறிந்து கொள்ள இந்நூல் உதவிடும். -வெ. சுந்தரம். நன்றி: செம்மலர், 1/10/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *