ஈரம்
ஈரம், சிவசு, தென்றல் பதிப்பகம், புதுச்சேரி, பக். 91,விலை 100ரூ.
எளிதில் புரியாத வரிகளைக் கொண்டு நவீனம் என்ற பெயரில் கவிதைகளாகப் படைக்கப்பட்டு வரும் தற்காலத்தில், எளிதில் புரியக்கூடிய தன்மை, ஆழமான சிந்தனை, உழைப்பின் வலியை, மேன்மையைச் சொல்லும் ரத்தினச் சுருக்கம் என்று கவிதைக்குரிய இலக்கணங்களைக் கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் ஈரம் நம் மனதில் ஒட்டிக்கொள்கிறது. எதிர்படும் வீடுகளை கட்டடங்களை/மரங்களை, தோட்டங்களை/ விழுங்கியபடியே ஊர்ந்து வருகிறது/ நெடுஞ்சாலைப் பாம்பு என்ற ஒரு கவிதை போதும் அவரது பாடுபொருள் எத்தகையது. அவரது பார்வையின் விலாசம் எவ்வளவு என்பதை நமக்கு உணர்த்திவிடுகிறது. உண்மையின் நிழலில் உணரப்படும் ஈரம் இவை. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 28/9/2015.
—-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், வானொலி அண்ணா, என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 150ரூ.
இது ஒரு மருத்துவ நாடக நூல். மருத்துவ நூல்களில் இது ஒரு புதிய முயற்சி. மருத்துவர் அல்லாதோரும் எளிய முறையில் மருத்துவத்தைப் புரிந்து கொள்ளும்விதத்தில் மருத்துவச் செய்திகளை நாடகமாகத் தந்துள்ளார் நூலாசிரியர். நோயாளிக்கு நோய் எப்படி வந்தது? எதனால் வந்தது, எத்தகைய மருந்துகளை உபயோகிக்க வேண்டும். எத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அந்தந்தத் துறை மருத்துவர்களைக் கொண்டே விளக்குவது சிறப்பு. அனைவர் கையிலும் இருக்க வேண்டிய நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 28/9/2015.