செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்
செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும், நிஜவாழ்வின் பொருளியலுக்குள் ஒரு பயணம், சி.டி. குரியன், தமிழில் ச. சுப்பாராவ், பாரதி புத்தகாலயம், பக். 272, விலை 170ரூ.
பொருளாதாரம் என்பது பொருட்கள், பணம் பற்றியதல்ல. அடிப்படையில் மனிதர்கள், அவர்களது சமூக உறவுகள் பற்றியது. யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்? யார் எதைப் பெறுகிறார்? என்ற மூன்று முக்கியமான கேள்விகள்தான் எந்தவொரு பொருளாதாரத்தையும் ஆய்வு செய்ய உதவும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள நூல். இந்த அடிப்படையில் பொருளியலின் பல்வேறு தன்மைகளை விரிவாக விளக்குகிறது. நூலின் இறுதிப் பகுதியில் இந்தியப் பொருளாதாரத்தின் தோற்றம், வளர்ச்சி, அதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அது சாதாரண மக்களுக்கு எந்தவிதத்தில் நன்மைகளை அல்லது பாதிப்புகளைக் கொண்டு வந்துள்ளது. கொண்டு வரப்போகிறது என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகிறது. கடந்த முப்பதாண்டுகளில் குறிப்பாக 1991இன் (உலகமயச்) சீர்திருத்தங்களுக்குப் பிறகு, கிராக்கியால் உந்தப்பட்ட வளர்ச்சி முறை பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக உழைக்கும் மக்களின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் செல்வங்கள் மேல்மட்டத்தில் ஒரு சிறு குழுவிடம் குவிந்துள்ளன என்கிறார் நூலாசிரியர். உற்பத்தியில் ஈடுபடும், குறைந்த வாழக்கைத்தரம் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் இருப்பதால், வளர்ச்சி நடவடிக்கையின் கவனம் கிராமப்புறம் பக்கமாகத் திரும்ப வேண்டும். இப்போது விவசாயத்துக்குப் பயன்படும் நிலத்தை விவசாயமில்லாத நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மாற்றுப்பொருளாதாரத் திட்டத்தையும் கூறுகிறார் நூலாசிரியர். அன்றாட வாழ்க்கையில், அரசின் பொருளாதாரக் கொள்கைகள் ஏற்படுத்தும் தாக்கத்தினைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 11/12/15.