ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம்
ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞரின் பயணம், இரா. நரேந்திர குமார், காவ்யா, விலை 250ரூ.
ஆண்டாள் கவிதைக்கு ஓர் ஆய்வடங்கல் எமிலி டிக்கின்ஸனின் கவிதை வரிகள் இவை. தனது சமூகத்தைத் தானே தேர்ந்தெடுக்கிறது ஆன்மா பிறகு அடைத்துவிடுகிறது கதவை. இந்த வரிகளைப் பற்றிக்கொண்டு ஆண்டாளின் அக உலகத்திற்குள் ஒரு வாசகர் பயணிக்க முடியும். கண்ணன் என்னும் கருந்தெய்வத்துடன் தன்னை முழுமையாகப் பிணைத்துக் கொண்டு, மற்ற உறவுகளைத் துண்டித்துவிட்ட ஆண்டாளை ஒரு முழுமையான கவிதைப் பரப்பில் வைத்துப் பார்க்கிறது, இரா. நரேந்திரகுமாரின் ஆண்டாள் கடவுளைத் தேடிய கவிஞனின் பயணம் நூல். காமம், பக்தி என்ற இரண்டு தளங்களிலும் இயல்பாகப் பயணித்து ஒரு கவி ஆளுமையை, அதன் வீரியமான உடல்-மன மொழியுடன், இன்றைய வாசகனின் முன்னே நிறுத்தியிருக்கிறார் நரேந்திர குமார். ஆண்டாள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இந்த நூலில் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. சங்க காலப் பெண் கவிஞர்களின் நீட்சியாகவே ஆண்டாளைப் பார்க்கும் நரேந்திர குமார், ஒரு ஆதிவாசிப் பெண்ணின் குரலையும், ஆண்டாளின் கவிதையில் கேட்கிறார். வில்லி இனத்துக்கும், கண்டன் இனத்துக்கும் இடையில் நடந்த ஊடாட்டத்தில் ஆண்டாள் மணம்புரிவதைத் தவிர்த்துவிட்டாள் என்ற மானுடவியல் பார்வையையும் முன்வைக்கிறார். இடைமுடியும் இடைப்பேச்சும் முடைநாற்றமும் இயல்பாகப் பெற்றுக்கொண்ட ஒரு பதின்பருவப் பழங்குடிப் பெண்ணின் குரல் மனத்தடைகளற்று ஒலித்துச் செல்வதை நுட்பமாய்க் கேட்டுப் பதிவு செய்கிறார். ஆண்டாள் சந்திரகலா மாலை, கோதை நாச்சியார், தாலாட்டு, ஆண்டாள் பிள்ளைத்தமிழ் போன்ற பிரபந்தங்கள் முழுமையாக வாசகர் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பேரரசர் கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்குக் காப்பியமான ஆமுக்த மால்யதா (சூடிக்கொடுத்த சுடர்க்கொடி) குறித்த விரிவான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.(இந்த தெலுங்குக் காப்பியத்தை அறிஞர் மு.கு. ஜகந்நாத ராஜா தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்). இந்தப் பிரபந்தங்களின் கவிதைப் பெறுமானம் பற்றி அபிப்பிராயம் பேதம் இருக்கலாம். ஆனால், பதிவுகள் என்ற அளவில் முக்கியமானவை. கவிமனம் பல நூற்றாண்டுகளாக ஆண்டாளைத் தொடர்கிறது என்பதை உணரவைப்பவை. அல்லது ஆண்டாள் என்கிற உருவம் படைப்பாளியைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது என்பதை உணரவைப்பவை. கூண்டில் அடைபட்ட கருடனைப்போல் எல்லையற்ற பெருவெளியை நாடித் துடிக்கும் ஆண்டாளின் கவிச்சிறகடிப்பைப் பல்வேறு கட்டுரைகளிலும் சொற்பொழிவுகளிலும் பதிவுசெய்துள்ள பேராசிரியர் அ. சீனிவாசராகவனைப் பற்றியும், இந்த நூலில் குறிப்பிட்டிருக்கலாம். பொதுவாக, டி.கே.சி. பதிப்பித்த முத்தொள்ளாயிரம் பதிப்பின் நேர்த்தியுடன் உருவாகியிருக்கிறது இந்த நூல். போகிறபோக்கில் ஆசிரியர் அள்ளித்தருகிற தகவல்களும், கவிதை வரி விளக்கங்களும் கூடியிருந்து குளிர்கிற வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன. ‘கொம்மை முலைகள் இடர்தீரக் கோவிந்தற்கு ஓர் குற்றவேல் இம்மைப் பிறவி செய்யாதே’ என்ற நாச்சியார் திருமொழி வரியில் ‘குற்றவேல்’ என்ற சொல்லுக்கு ‘ஆணால் செய்ய முடியாத அந்தரங்கக் கைங்கரியம்’ என்ற விளக்கமும் ஆண்டாள் கவிதை எல்லையை மிக நுட்பமாக விரித்துக்கொடுக்கின்றன. மரபுக்குள் நின்று இதைச் சாதித்திருக்கிற ஆண்டாளின் கவிதைக்கான ஆய்வடங்கலாகவே இந்த நூலைக் கொள்ளலாம். -ந. ஜயபாஸ்கரன். நன்றி: தி இந்து, 28/11/2015.