சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம்

சேர மண்டல வரலாற்றுக் களஞ்சியம், பா. சசிக்குமார், விஜயா பதிப்பகம், பக். 248, விலை 160ரூ.

சேர மண்ணை சேர்ந்தவர் சாணக்கியர்? சேர மண்டலத்தின் வரலாறு, இலக்கியம், ஆன்மிகப் பெருமைகளை காலவாரியாக தொகுத்து, வரலாற்றுக் களஞ்சியமாக மிகவும் சுவையுடன், இந்த நூல் வழங்குகிறது. ‘சேரலரே’ இன்றைய, ‘கேரளர்’ என்கிறார், நூலாசிரியர். இந்திய தேசமெங்கும் தமிழ் பரவியிருந்தது. இதற்கு ஆதாரமாக, இன்றைய பல பெயர்கள், தமிழிலிருந்து வந்தவையே. பேலாப்பூர் (வேளார்புரம்), பேலூர் (வேள்ஊர்), பெல்காம் (வேள்அகம்), பெல்லாளன் (வெள்ளான்) என்று ஆதாரத்துடன் கூறுகிறார். உலக வர்த்தகத்தில், தமிழகத்தின் முத்து, மிளகு, நறுமணப் பொருட்கள், அரிசி, மஞ்சள், இஞ்சி ஏற்றுமதியானதை எழுதி, சீன அறிஞர் யுவான் சுவாங் இங்கு வந்ததையும், காஞ்சிபுரம் போதிதர்மர், சீனாவிற்கு சென்றதையும் அருமையாகக் குறிப்பிடுகிறார். சந்திரகுப்த மன்னனை, கி.மு. 325ல் சாதனை செய்ய வைத்த சாணக்கியர், தமிழர் என்ற புதிய செய்தியை தந்துள்ளார். கறுத்த, குள்ளமான, அறிவு நுட்பமான, ராஜதந்திரமும், அளவிலா ஆற்றலும் கொண்ட சாணக்கியர், சேரநாட்டு முசிறி அருகே பிறந்து வளர்ந்தவர். இந்தியாவின் முதல் பேரரசு நிறுவக் காரணமாக இருந்தவர் (பக். 36) என்று கூறுகிறார். ஆயினும் அதற்கான ஆதாரத்தை காட்டவில்லை. ராணுவ இசைக்குழுவை தமிழன் வைத்திருந்தான் என்பதை, நற்றிணை, 113ம் பாடலால் நிரூபிக்கிறார். இமயத்தில் விற்கொடி பொறித்த நெடுஞ்சேரலாதனின் வீரத்தையும், அவன் கட்டிய கண்ணகி கோவிலையும், தமிழனின் வீரத்திற்கு தடயங்களாக காட்டியுள்ளார். களப்பிரர் ஆண்ட, 300 ஆண்டு காலம், இருண்ட காலம் இல்லை என்று, இலக்கிய ஆதாரங்களுடன் கூறியுள்ளார். சேரமானும், சுந்தரரும் சேர்ந்து சைவத்தமிழ் வளர்த்ததை, முழு அத்தியாயமாகவே வரைந்துள்ளார். குலசேகர ஆழ்வார், சேரநாடு வஞ்சியில் உதித்து செய்த தமிழ்ப் பணிகளையும், தொண்டுகளையும் பக்தியுடன் எழுதியுள்ளார். காலடியில் பிறந்த ஆதிசங்கரர் துவங்கி, வைக்கத்தில் போராடிய ஈ.வெ.ரா., வரையில் வரிசைப்படுத்தி உள்ளார். தேச விடுதலைப் போரில், நேசமணி, பசும்பொன் தேவருடன், தமிழக பகுதிக்காகப் போராடிய தலைவர்களில், தினமலர் நாளிதழின் நிறுவன டி.வி.ராமசுப்பையரை படத்துடன் (பக். 229) நினைவு கூர்ந்துள்ளார். சரியான தகவல்கள், படங்கள், ஆதாரங்களுடன் சுவையாக எழுதப்பட்டுள்ள, பாராட்டத்தக்க வீரமிகுசேரர் வரலாற்று பேழை இந்த நூல். -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 20/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *