நிலைபெறுமாறு எண்ணுதியேல்
நிலைபெறுமாறு எண்ணுதியேல், முனைவர் சொ. சேதுபதி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 220, விலை 165ரூ.
‘கற்கோவிலுக்குள் வீற்றிருக்கும் இறைவனைச் சொற்கோவிலுக்குள் எழுந்தருளச் செய்தது அப்பர் தமிழ்’(பக். 9) எனும் நூலாசிரியர், திருவாரூர் திருத்தாண்டகத்தின் ஒரு பாடல் அடியை தொடக்கமாகக் கொண்டு, ‘நிலைபெறுமாறு எண்ணுதியேல்’ என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார். தேடல் நிறைந்த தன் தனி வாழ்வை, தவ வாழ்வாக்கித் தமிழ் வாழ்வாக உயர்த்திப் பற்பல அற்புதங்கள் புரிந்தவர் அப்பர் (பக். 19). ‘என் கடன் பணி செய்து கிடப்பதே, நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே’ இப்படி ஏராளமான தொடர்களை தந்த அப்பர் பெருமானின் நாமங்கள் (பெரியபுராணத்தில் 93 பெயர்கள்) இடம் பெற்றுள்ளதையும் (பக். 212) தொகுத்து தந்துள்ளார். பிறப்பும், இறப்பும் (பக். 158) இல்லறத்தார்க்குப் புகட்டிய நல்லறம் (பக். 164) என, பல பாடல்களை எடுத்தாண்டு, ‘சொற்குறுதி அப்பரெனச் சொல்’ (பக். 169) எனும் பழம்பாடல் மூலம், திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டின் நெறி’யினைச் சிறப்பாக, நயமான நடையில், சொற்சுவை குன்றாமல் நூலைப் படைத்துள்ளது பாராட்டுதற்குரியது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 10/1/2016.