சிந்தனை ஒன்றுடையாள்
சிந்தனை ஒன்றுடையாள், கே.எஸ். சுப்ரமணியன், அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பக். 512, விலை 350ரூ.
கண்ணாடியும் பிம்பமும்போல தமிழும் சமஸ்கிருதமும்! ஓர் ஆடை, நூலிழையும், பாவுமாய் இணைந்து உருவாவதுபோல், பாரத நாட்டின் பழம் பெருமை, பண்பாடு, ஒருமைப்பாடு ஆகியன, செவ்வியல் மொழிகளான சமஸ்கிருதம், தமிழ் ஆகிய இரு மொழிகளாலும் கட்டிக்காக்கப்படுகின்றன. அந்த வகையில், சமஸ்கிருதத்தில்தான் படித்துச் சுவைத்த அரிய பகுதிகளைத் தமிழில் கொண்டு வர வேண்டும் எனும் பேரவா காரணமாக, நூலாசிரியர் இந்த நூலை உருவாக்கியுள்ளார். வேதம், உபநிஷத்துகள், கீதை, பர்த்ருஹரியின் நீதி சதகம், காளிதாசன் படைப்புகள் என, பரந்துபட்ட சமஸ்கிருத பேரிலக்கியங்களிலிருந்து தாம் நுகர்ந்த கனிகளை, நமக்கு ஆனந்தப் படையலாக்கி அர்ப்பணிக்கிறார் நூலாசிரியர். மொத்தம், 16 தலைப்புகள். ஒவ்வொரு இயலிலும், முதலில் சமஸ்கிருத மூலம், அதன் தமிழாக்கம், தொடர்ந்து அதற்கு இணையான அல்லது துணையான மேற்கோள்கள் தமிழிலக்கியப் பரப்பிலிருந்து தரப்பட்டுள்ளன. சான்றாக, ‘உத்தரே தாத்மனாத்மானம்’ எனத் துவங்கும் பகவத் கீதை அடிகளுக்கு, ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ எனும் பறனானூற்று அடிகளும் (பக். 80), ‘ஜனனீ ஜன்மபூமி’ எனும் ‘கஹாவத்ரத்னாகர’ அடிகளுக்கு, ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்’ எனும் பாரதியாரின் கவிதை வரிகளும் (பக். 202 காட்டப்பட்டு உள்ளதைக் கூறலாம். ‘மித்ரஸ்வ ஜனபந்தூ னாம்’ என, துவங்கும் ஸூபாஷித ஸூதா நிதி மூலத்திற்கு, ‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்’ என, துவங்கும் அவ்வையார் பாடலோடு (பக். 24), ‘கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்’ எனும் திருக்குறளும், ‘யாவத்ஸ்வஸ்த மிதம்’ என துவங்கும் பர்த்ருஹரியின் வைராக்ய சதக மூலத்திற்கு, ‘நின்றன நின்றன’ என துவங்கும் நாலடியார் (பக். 79) பாடலோடு ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ என, துவங்கும் புறநானூற்றுப் பாடலும் நெஞ்சில் நிழலாடுகின்றன. தீமை உறவு, வணிகம், கறுப்பு பணம் எனும் தலைப்புகளில் காட்டப்பட்டுள்ள சமஸ்கிருத மூலத்திற்கு (பக். 228), தமிழ் மேற்கோள்கள் காட்டப்படவில்லை. நூலாசிரியருக்கும், தமிழன்னைக்கும் அக்கருத்துகள் உடன்பாடில்லை போலும். நூலாசிரியருக்கும், சமஸ்கிருத புலமையுடைய தமிழ் ஆர்வலர்களுக்கும் அன்பான வேண்டுகோள்… இதுபோன்று இன்னும் பல அரிய படைப்புகளைத் தமிழுலகம் தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறது. -புலவர் சு. மதியழகன். நன்றி: தினமலர், 17/1/2016.