ஊரங்கு உத்தரவு
ஊரங்கு உத்தரவு, பி.என்.எஸ். பாண்டின், வெர்கோபேஜஸ் பதிப்பகம்.
புதுச்சேரியை உலுக்கிய 10 நாட்கள் புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாற்றை சித்தரிக்கும், ‘ஊரடங்கு உத்தரவு’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். பி.என்.எஸ். பாண்டியன் எழுதிய இந்த நூலை, வெர்கோ பேஜஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. நூலாசிரியர் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது நடந்த போராட்டம். அவர் எழுத்தாளர் ஆன பின், ஒரு வரலாறாகப் பதிவு செய்துள்ளார். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, புதுச்சேரியை, 1979ல் ஆண்டது. மத்தியில் ஜனதா ஆட்சி நடந்தது. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி ஆட்டம் கண்டபோது, அரசியல் தந்திரமாக, புதுச்சேரியை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர். மொராஜி தலைமையிலான மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தது. இதை, புதுச்சேரி மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். 1979 ஜனவரி 21 முதல் ஜனவரி 31 வரை, 10 நாட்கள் போராட்டத்தில் குதித்தனர். கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கும்போது, ‘தமிழ் பேசும் சிறு பகுதியான புதுச்சேரியை, தமிழகத்துடன் இணைத்துவிடலாம்’ என, மொராஜி கூறியதாகவும் நூலில் ஆசிரியர் சொல்கிறார். புதுச்சேரியை இணைக்கும்போது, பிரான்ஸ் நாட்டுடன் இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில், மக்கள் கருத்து அறியாமல், வேறு மாநிலத்துடன் புதுச்சேரியை இணைக்கக்கூடாது என்பது முக்கிய ஷரத்து. இதை, மத்திய அரசு தூக்கி எறியும் முயற்சியில் ஈடுபட்டது. புதுச்சேரியில் உள்ள அரசியல் கட்சிகள், வேற்றுமைகளை மறந்து, தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்கக்கூடாது என, போராட்டத்தில் குதித்தன. ‘தமிழகத்துடன் புதுச்சேரியை இணைக்கும் முயற்சியை, மத்திய அரசு கைவிடாவிட்டால், புதுச்சேரிய ஜனதா கலைக்கப்படும்’ என அக்கட்சியினர் அறிவித்தனர். மக்களின் போராட்டத்தை அடக்க, காவல்துறை எப்படி செயல்பட்டது என்பதை, ‘ஊரடங்கு உத்தரவு’ வர்ணிக்கிறது. போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக, ஜனவரி 26 குடியரசு தினத்தை புதுச்சேரி மக்கள் புறக்கணித்தனர். நூலில் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை பதிவு செய்துள்ளது முக்கியமானது. -பா. செயப்பிரகாசம். (எழுத்தாளர்) நன்றி: தினமலர், 31/1/2016.