உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள், சீத்தாகந்த் மகாபாத்ரா, தமிழில் முனைவர் ஆனைவாரி ஆனந்தன், சாகித்ய அகாடமி, பக். 208, விலை 125ரூ.
பழங்குடி மக்களை விவரிக்கும் சிறுகதைகள்! இந்த நூல் 13 கதைகள் வழி, வித்தியாசமான பாடுபொருள்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியர், புகழ்மிக்க கோபியாத் மொகந்தி, பழங்குடி மக்களின் வாழ்வியலைத் தம் கதைகளில் படம் பிடித்துக் காட்டுவதில் ஈடுபாடுடையவர். இந்த நூலிலும், ஒன்றிரண்டு கதைகள் அந்த பின்புலத்தில் அமைந்துள்ளன. இருப்பினும் குடும்பப் பாங்கான கதைகளும் இதில் உள்ளன. ‘அம்புப் படுக்கை, இருவீரர்கள், வீடு திரும்புகையில், அடையாளம்’ முதலிய கதைகள் அத்தகையன. ‘அம்புப் படுக்கை’ என்ற கதையில் வரும் கமலா, அவள் கணவன் இலக்கியப் பேராசிரியர் சூரபாபு ஆகியோரைப் பற்றியது. உடல் மிக நலிவுற்ற நிலையிலும் தன் கணவனிடம் கொண்ட பாசமும், இன்னொருத்தியைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லும் அவளது எண்ணமும் கமலாவின் நனவோட்டமாகச் சொல்லப்பட்டுள்ளன. ‘எறும்புகள்’ என்ற கதை, பழங்குடி மக்களான கோண்டு இனத்தவரைப் பற்றியது. அரிசி கடத்தலைப் பின்புலமாகக் கொண்டு, அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கும் அதிகாரிகள், அந்த மக்களின் வறுமையை எண்ணிப் பார்த்து இரக்கம் கொள்ளும்வகையில் பின்னப்பட்டுள்ளது. ‘குட்டிக்கரணம்’ என்னும் கதையில் வரும் ஜெகபாலே, ஒரியாவன் சிறந்த மல்யுத்த வீரன், இறுதிச் சுற்றில் பஞ்சாபி வீரன் திலீப் சிங்கிடம் தோற்றுப் போனாலும், இயல்பாக எடுத்துக்கொண்டு, தான் செய்து வந்த சாக்கு சுமக்கும் தொழிலில் ஈடுபடுகிறான். ‘தட்பன்’ என்ற கதை, மலைக்குடி மக்களின் வாழ்வோவியம். ‘வீடு திரும்புகையில்’ என்ற கதை, பல பொறுப்புகள் வகித்து நல்ல பெயர் எடுத்த விஸ்வமூர்த்தி, ஓய்வு பெறும் நாளை எண்ணிய நினைவுகளை, பழைய அடிச்சுவட்டின் வார்ப்பில் எண்ணிப் பார்ப்பதை மையமாக்குகிறது. ‘அந்தப் பறவை’ என்ற கதை, சங்கர் மிஸ்ரா, தான் கண்ட அழகிய பறவையின் தோற்றத்திலும், அதன் செயற்பாட்டிலும் மனம் பறிகொடுப்பதையும், அந்தப் பின்னணியில் தன் வாழ்வியலை எண்ணிப் பார்ப்பதையும் கவித்துவமாகச் சொல்கிறது. ‘எறும்புகள், அடையாளம்’ ஆகிய கதைகள், சிறுகதை என்ற உணர்விலிருந்து குறுநாவலுக்குரிய வடிவத்தையும், கதைப் பொருளையும் கொண்டுள்ளன. இக்கதைகள் யாவும் மொழிபெயர்ப்பு என்ற உணர்வு ஏற்படாதவாறு, சரளமாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது. இன்னொரு மொழியில் எழுதப்படும் கதைகள், வித்தியாசமான கருவிகனைக் கொண்டிருப்பதை, வாசகர் உணர்ந்துகொள்ள, இது போன்ற நூல்கள் உதவும். -ராம. குருநாதன். நன்றி: தினமலர், 31/1/2016.