தமிழின் பெருமை
தமிழின் பெருமை, முனைவர் மூ. இராசாராம், அல்லயன்ஸ் கம்பெனி, விலை 390ரூ.
இந்த நூலின் முன்னுரையில் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் எழுதியதுபோல, தமிழரின் தொன்மை முதல் புதிய கற்காலம் வரை தமிழ் மற்றும் தமிழர்தம் வளர்ச்சியை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்த நூலை படித்தால் போதும். பண்டைய தமிழகம் என்றால் எது? என்று தொடங்கி தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ் பண்பாட்டின் தொன்மையை வரலாற்றுச் சான்றுகளோடு, 71 தலைப்புகளில் இந்த நூலாசிரியரான மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மூ. ராஜாராம் விளக்கி உள்ளார். இந்த நூலை படிப்பதன் மூலம் ஆதிகாலம் தொட்டு இந்த காலம் வரை தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் வரலாற்றை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு தலைப்பிலும் கூறப்பட்ட கருத்துகள், அனைத்திற்கும் ஆதாரமாக சிலப்பதிகாரம், விவிலியம், தொல்காப்பியம், புறநானூறு மற்றும் பல்வேறு வரலாற்று நூல்களில் இருந்தும் திரட்டப்பட்ட தகவல்கள், படங்களை பார்க்கும்போது வியப்பின் உச்சிக்கே இழுத்து செல்கிறது. தமிழன், ஆதிகாலத்திலேயே எவ்வளவு நாகரிகம் படைத்தவனாக இருக்கிறான் என்பதை, அவன் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் சங்க கால இலக்கியங்களில் இருந்து தெளிவாக தெரிகிறது. நூலை படித்து முடிக்கும்போது, “என் மொழி தமிழ், என் நாடு தமிழ்நாடு, நான் தமிழன்” என்ற பெருமையால் நிச்சயமாக ஒவ்வொருவரின் நெஞ்சமும் விம்மும். நன்றி: தினத்தந்தி, 20/1/2016.