நல்ல தமிழில் எழுதுவோம்
நல்ல தமிழில் எழுதுவோம், என் சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்.256, விலை ரூ.200.
தமிழர்கள் தம் தாய்மொழியின் பெருமையை உணர்ந்து அதைப் பிழையில்லாமல் படிக்கவும் எழுதவும் பழக வேண்டும். ஏனெனில், தமிழ் மொழியில் ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். ஒரு மொழிக்கு ஆணிவேர் போன்றது இலக்கணம். அதை முறையாக – சரியாகக் கற்றுக் கொண்டால்தான் பிழை இல்லாமல் எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் முடியும். மொழித் தூய்மைக்கு முக்கியமானது பிழை இல்லாமல் எழுதுவதுதான்.
இன்றைக்கும் பலரும் தடுமாறிப் போவது வல்லின, மெல்லினச் சொற்களைக் கையாள்வது; ஒற்றுக்களை எந்தெந்த சொற்களுக்கிடையே பயன்படுத்த வேண்டும் என்பது; முதலிய, போன்ற, ஆகிய என்கிற சொற்களை எங்கே பயன்படுத்துவது என்பது; சுவரிலா? – சுவற்றிலா?; ஆறிலா? – ஆற்றிலா; அல்ல, அன்று, இல்லை, அல்ல என வரும் சொற்களைப் பயன்படுத்துவதில் தடுமாற்றம்; ஒருமை, பன்மை மயக்கம்; ஓர், ஒரு ஆகியவற்றைப் பயன்படுத்தும் இடங்கள்; முதல்முறை, முதன்முறை; ஆற, ஆர – இவ்வாறுள்ள பல சொற்களை எடுத்துக்காட்டி, அவற்றை எங்கெங்கே கையாள வேண்டும் என்பதைக் கூறியுள்ளார் நூலாசிரியர்.
சில பத்திரிகைகளிலும், நூல்களிலும், திரைப்படப் பாடல்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும், பட்டிமன்ற பேச்சுக்களிலும் இத்தகைய பிழைகள் காணப்படுவதற்குக் காரணம், மேற்கூறிய அடிப்படைச் சொற்களைக் கையாளத் தெரியாததுதான் என்றும், அத்தகைய சில தவறுகளை சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
நன்றி: தினமணி, 22/8/2016.