மேடைப்பேச்சு
மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170.
சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன?
சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன.
நூலாசிரியர் தான் கேட்டு அனுபவித்த பல தலைவர்களின் மேடைப் பேச்சுகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். ஆசிரியர் சிறுவனாக இருந்தபோது முதன்முதலாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் மேடைப் பேச்சைக் கேட்டிருக்கிறார்.
“பராசக்தியின் வடிவாக அமர்ந்துள்ள என் தாய்மாரே’‘ என்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேசத் தொடங்கியிருக்கிறார். பெரியார் தன் முன்னுள்ள மக்களை முட்டாள்களே என்று விளித்துப் பேசியது, ராஜாஜி சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் பேசிய உரைகள் அனைத்துமே அரிய, ஆழ்ந்த சிந்தனை உடையதாக இருந்தது, ஜீவா, அண்ணாதுரை ஆகியோரின் நாவன்மை பற்றியெல்லாம் மிகவும் சுவைபட நூலாசிரியர் விவரித்துள்ளார்.
கூடவே நூலாசிரியர் தனது மேடைப் பேச்சு அனுபவங்களை, பிறர் பேசும்போது அவற்றை மொழிபெயர்த்த அனுபவங்களை எல்லாம் பதிவு செய்திருக்கிறார். தற்போது மேடைப்பேச்சில் சிறந்து விளங்குபவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். மேடைப் பேச்சு தொடர்பான சிறந்த பதிவு.
நன்றி: தினமணி, 23/1/2017