வழிகாட்டும் கதைகள்

வழிகாட்டும் கதைகள், நல்லி குப்புசாமி செட்டியார், ப்ரெயின் பேங்க் வெளியீடு, பக். 224, விலை 150ரூ.

சிறந்த தொழிலதிபரான இந்நூலாசிரியர் வாழ்வியல், வணிகவியல், நிர்வாகவியல் பற்றிய நூல்கள், மகா கவி பாரதியார், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற மகான்களைப் பற்றிய நூல்கள் என நற்சிந்தனைகளைத் தூண்டும் 50-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்.

அந்த வகையில் இந்நூல் இன்றைய தலைமுறையினரை நல்வழிப்படுத்தும் 100 சிறுகதைகளைத் தொகுத்துள்ளார். குறிப்பாக, கடவுள் நம்பிக்கை, முயற்சி, புத்திசாலித்தனம், கருணை, மன்னிப்பு, ஞானம்… என்று நற்சிந்தனைகளைத் தூண்டும் சிறு கதைகளை, பாமரர்களும் படித்துணரும்படி மிக எளிய நடையில் இயற்றியுள்ளார்.

‘மனம் என்னும் பையில்’ என்ற முதல் சிறுகதை, ஒரு நகைப்பெட்டியில் விலை மதிப்புமிக்க நகைப் பொருட்களைத்தான் வைப்போம். குப்பைகளை நிரப்பமாட்டோம். மனித மனமோ மதிப்பிட முடியாத பெட்டி. அதில் அன்பு, கருணை, ஈகை… போன்ற நல்லவற்றை நிரப்ப வேண்டும். கோபம், பொறாமை, கேளிக்கை, வீண் அரட்டை… போன்ற தீயவற்றை நிரப்பக்கூடாது என்பதை விளக்குகிறது.

‘உள்ளதைப் பெருக்கி..’ என்ற அடுத்த சிறுகதை, ஒரு நல்ல தலைவனுக்குத் தேவை நல்ல திறமை மட்டுமல்ல, நாட்டிற்கு நற்பலனைத் தரும் செயலாற்றலும் வேண்டும் என்பதை போதிக்கிறது. வாழக்கையில் முன்னேற, பண முதலீடு மட்டும் போதாது. நம்மை சுற்றி இருக்கும் தகவல் அறிவையும் பெற்று, அதன் அடிப்படையிலும் செயல்பட்டால் மிக எளிதாக முன்னேறலாம் என்ற யுக்தியை ‘துணிவே துணை’ என்ற சிறுகதை விளக்குகிறது.

ஒவ்வொரு கதையும் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களில் இருந்தாலும், நல்ல சிந்தனைகளைத் தூண்டும் பெரிய கருத்துக்களைக் கூறுவது பாராட்டத்தக்கது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 28/12/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *