உங்களுக்கான 24 போர் விதிகள்
உங்களுக்கான 24 போர் விதிகள், செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்., சுரா பதிப்பகம், பக். 208, விலை 150ரூ.
1987 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்நூலாசிரியர், தமிழக காவல்துறையின் உயர் பொறுப்புகள் பலவற்றிலும், நேர்மையாகவும், திறம்படவும் பணியாற்றி முதலமைச்சர் விருது, பிரதமர் விருது என்று பல விருதுகளையும் பெற்று வருபவர்.
தவிர, தமிழக இளைஞர்களுக்கு u.p.s.c.பதவிகளுக்கான போட்டித்தேர்வை எதிர்கொள்ள, இலவசப் பயிற்சி அளிப்பவர். இந்நூலில்இளைய தலைமுறையினரின் தன்னார்வத்தைக் கிளரச் செய்து, அவர்களின் வாழ்க்கைப் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கும் தடைகளை வெற்றி கொள்ளும் 24 போர் விதிகளை கூறி, ஒவ்வொன்றையும் ஒரு விரிவான கட்டுரை மூலம் விளக்கியுள்ளார்.
அதாவது, ஒவ்வொரு கட்டுரையிலும் அதற்குரிய சரித்திரச் சான்று, தற்போதைய உலக நடப்பு, விதிவிலக்கு, செயல், நினைவில் கொள்வது, படிக்க வேண்டிய நூல் என்று பல தலைப்புகளில் விளக்குகிறார். முதல் விதியான ‘சாதனையை அடிப்படைத் தேவையாக்கு’ என்ற முதல் கட்டுரையில், முன்னேறத் துடிக்கும் இளைஞன், முதலில் தீர்மானிக்க வேண்டியது என்ன என்பதை விவரிக்கிறார்.
தென் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி எப்படி நிலை கொண்டது, அதற்கு ஆங்கிலேய கவர்னர் சாண்டர்ஸும், இளம் படைத்தளபதி ராபர்ட் கிளைவும் ஒவ்வொரு கட்டத்திலும் ஃபிரெஞ்சுப் படைகளை முறியடித்து எப்படி வெற்றிவாகை சூடினர் என்ற சரித்திரச் சான்றுகளை விறுவிறுப்புடன் விளக்கியுள்ளார்.
இதேபோல் அக்கட்டுரைக்கான உலக நடப்பு, விதிவிலக்கு, செயல், நினைவில் கொள்வது, படிக்க வேண்டிய நூல் போன்றவற்றையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். இப்படி இந்நூலில் வரும் ஒவ்வொரு கட்டுரைகளும், வாழ்க்கையில் சாதிக்க நினைப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 29/3/2017.