ஆனந்த யாழ்
ஆனந்த யாழ், ஆரூர் தமிழ்நாடன், நக்கீரன் பதிப்பகம், பக். 264, விலை 170ரூ.
திரைப்படப் பாடலாசிரியராகவும், சிறந்த கவிஞராகவும் அறியப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு அகால மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவருடனான தங்களின் பழக்கத்தையும் நெருக்கத்தையும் அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், திரையுலகப் புள்ளிகள், அரசியல் பிரபலங்கள் போன்ற பல்வேறு துறையினரும் வெவ்வேறு ஊடகங்களில் பதிவு செய்ததன் தொகுப்புதான் இந்நூல்.
திரைப்படப் பாடலாசிரியராக பதினைந்தே ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும் அக்காலகட்டத்தில் ஏறக்குறைய 1500 பாடல்கள் எழுதியுள்ளார் என்பது வியப்பைத் தருகிறது.
அவற்றில் பெரும்பாலான பாடல்கள் மக்களால் கொண்டாடப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமல்ல, தொடர்ந்து எழுதுபவர்கள் தரத்தில் சமரசம் செய்து கொள்ள நேரிடும் என்கிற பொதுநம்பிக்கையைப் பொய்யாக்கி, இந்தியாவிலேயே சிறந்த பாடலாசிரியர் என்கிற தேசிய விருதைத் தொடர்ந்து இருமுறை பெற்றிருக்கிறார் நா.முத்துக்குமார்.
அவரைப் பற்றி எல்லாரும் தவறாமல் குறிப்பிட்டிருப்பது அவருடைய எளிமை மற்றும் நண்பர்களுக்கு உதவும் குணம் இரண்டையும்தான்.
முத்துக்குமாரிடம் உதவியாளராகப் பணியாற்றிய வேல்முருகன், தான் அவரிடம் வேலைக்குச் சேர்ந்தவிதம், தனக்கு அவர் சைக்கிள், செல்போன் வாங்கித் தந்தது, தான் பட்டப்படிப்பு படிக்க விரும்பியபோது, பணம் தந்து பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்தது போன்ற பல விவரங்களைச் சொல்லியிருப்பது முத்துக்குமார் பற்றிய ஒரு சித்திரத்தை மனதில் தோற்றுவிக்கிறது.
“அவர் வீட்டில்தான் புதுமைப்பித்தன் முதல் ஜி.நாகராஜன் வரை பலரையும் புத்தகங்கள் மூலம் அறிந்து கொண்டேன்” என்று வேல்முருகன் குறிப்பிடும்போது, முத்துக்குமாரின் வாசிப்பு உலகம் எவ்வளவு பரந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.
முத்துக்குமார் அவ்வப்போது தன்னைப் பற்றி எழுதிய கட்டுரைகளும் அவருடைய நேர்காணல் ஒன்றும் இத்தொகுப்பில் உள்ளன. நா.முத்துக்குமாரை அறிந்தவர்கள் அவரை நினைவுகூர்வதற்கும், அறியாதவர்கள் அவரை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் உதவும்.
நன்றி: தினமணி, 20/2/2017.