அவளுக்கு வெயில் என்று பெயர்
அவளுக்கு வெயில் என்று பெயர், தமிழச்சி தங்கப்பாண்டியன், உயிர்மை பதிப்பகம்.
அப்பாவின் எதிர்நீச்சல் துவங்குவது எங்கே?
தமிழச்சி தங்கப்பாண்டியன் எழுதிய ‘அவளுக்கு வெயில் என்று பெயர்’ கவிதைத் தொகுப்பை சமீபத்தில் படித்தேன். உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இலக்கியம் தெரியாதோரும், சாதாரணமாக வாசிப்பு பழக்கம் உள்ளோரும் புரிந்து கொள்ளும் எளிய வார்த்தைகளைக் கையாண்டு, கவிதைகளை எழுதி உள்ளார். ‘என் மண்ணில் இல்லாத செழுமை வேறு எங்கும் இல்லை’ என்ற மண்ணின் மீது கொண்ட செருக்கு, ஒவ்வொரு கவிதையிலும் வெளிப்படுகிறது.
கவிதைத் தொகுப்புக்கு வெயில் என ஏன் பெயரிட்டேன் என்பதற்கு, வெயிலை அன்போடு ஒப்பிட்டுச் சொல்லும் கவிஞரின் ஒப்பீடு மிக அருமை. 32 தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இத்தொகுப்பில் உள்ளன. வழக்கமாக, எல்லோரும் தாயைத்தான் போற்றுவர். தந்தை, தாய்க்கு இணையான இடம் அவ்வளவாகக் கொடுப்பதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பில்,அப்பாவின் எதிர்நீச்சல் பற்றி சொல்லி உள்ளார். அம்மாவை செல்லமாக அடிப்பதைவிட, அப்பாவைத்தான் குழந்தை அதிகம் அடிக்கும். அந்த அடியை ஏற்று, ஒரு தந்தையின் எதிர்நீச்சல் துவங்குகிறது என, குடும்பத் தலைவனின் வாழ்க்கை போராட்டத்தை சொல்கிறார் கவிஞர்.
கவிதைத் தொகுப்பை, பாலச்சந்திரன் பிரபாகரனுக்கு அர்ப்பணித்துள்ள கவிஞர், ‘உன்னை இரக்கமின்றி கொன்ற பாதகர்களை என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நீ இல்லாத இந்த உலகில், என் பால் கொடுக்கும் மார்பு தேவையில்லை. அதை அறுத்து எறிகிறேன்’ என, அந்தத் தாய் வருந்துவதாகச் சொல்லும் கவிதை நெஞ்சை உருக்குகிறது.
உலகின் பல்வேறு நாடுகளின் இலக்கியங்கள் மக்களை கவர்ந்தவை. அந்நாடுகளின் கவிஞர்கள், அவர்கள் சார்ந்த மண்ணையும், மரபையும், மொழியையும் உயர்த்திப் பிடிப்பார்கள். கவிதைகள் மூலம், மண்ணின் மரபை தீயாக ஏந்தியும் உள்ளனர். அந்த வகையில், தமிழ் மண்ணையும், அதன் மரபையும் விட்டுக் கொடுக்காத கவிதைத் தீயை, தீப்பந்தமாக ஏந்திச் செல்கிறார் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்.
-க. திருவாசகம்,
துணைவேந்தர்,
அமிட்டி பல்கலைக்கழகம்.
நன்றி: தினமலர், 10/4/2016.