குறுந்தொகை மலர்கள்

குறுந்தொகை மலர்கள், ப. அநுராதா, ரமணி பதிப்பகம், பக். 176, விலை 150ரூ.

புலி புலி என்று கூவினால் பூக்கள் உதிரும்!

சங்க இலக்கியங்களில் ‘நல்ல குறுந்தொகை’ எனும் சிறப்பான அடைமொழியைப் பெற்ற குறுந்தொகையில் காணப்படும் மலர்கள் குறித்து விவரிப்பதுதான் இந்த நூல். குறுந்தொகையில், அடும்பு துவங்கி வேம்பு வரை, 46 மலர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அந்த மலர்களது அகர வரிசைப்படி ஒவ்வொரு மலரையும், மலர் குறித்த தாவரவியல் கருத்து, தாவரவியல் பெயர், மலர் இடம் பெறும் பாடல் எண்வரி, புலவரின் பெயர், பாடல் யார் கூற்று, அதன் வழி அறிய வரும் உவமை, உள்ளுறை, இறைச்சி, அக்கால சமுதாய வரலாறு, புவியியல் கருத்துகள் ஆகிய மூன்று நிலைகளில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார்.

இவை தவிர, மலர் மூலம் அறியவரும் பொது மற்றும் வரலாற்றுக் கருத்துகளையும் நூலாசிரியர் தொகுத்தளித்துள்ளார். சான்றாக வேங்கை மலர் பற்றிக் கூறும் ஆசிரியர், இடைச்சிறுவர்கள் மரத்தின் கீழிருந்தபடியே ‘புலி… புலி…’ என்று கூவினால், பூக்கள் உதிரும் என்று நம்பினர் என்றும், ஆய் என்னும் கடையெழு வள்ளலின் பொதியமலை குறித்தும் அதில் வேங்கை மலர்ந்திருந்த சிறப்பு குறித்தும் நூலாசிரியர் விளக்குகிறார்.

அதைத் தொடர்ந்து, மலர்களைப் பாடிய புலவர், மலர்கள் இடம்பெற்றுள்ள திணைகள், மர்கள் யாருடைய கூற்றில் எத்தனை முறை இடம்பெறுகின்றன, புலவரும் பாடிய மலர்களும், ஒரே பாடலில் இடம் பெறும் ஒன்றுக்கு மேற்பட்ட மலர்கள் என்ற ஐந்து அட்டவணைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை நல்ல தொகுப்பு. முடிவாகச் செண்டு என்னும் தலைப்பில் மலர்களைப் பற்றிய கருத்துகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

அதில் ‘அடும்பு, தவளம், நரந்தம், பித்திகம், முல்லை முதலாயின சூடும் மலர்கள், அவை மாலையாகவும், பயன்பட்டுள்ளன’ என்பன உள்ளிட்ட தகவல்களை, நூலாசிரியர் அளித்துள்ளார். சங்க இலக்கியங்களில், மலர் குறித்து இதுவரை பலர் ஆய்வு செய்திருந்தாலும், இதுபோன்ற நுண்ணிய ஆய்வு நூல், இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் ஆய்வாளர்களுக்கு மட்டுமின்றி, ஆர்வலர்களுக்கும் இந்த நூல் பயனாகும்.

-முனைவர் இராஜ பன்னிருகை வடிவேலன்.

நன்றி: தினமலர், 10/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *