காந்தி எனும் மனிதர்
காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதய இலக்கியப் பண்ணை, பக். 144, விலை 100ரூ.
இந்நூலாசிரியர், லண்டனைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஹென்றி போலக் தென்னாஃபிரிக்காவில் காந்தி ஜியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து, தென்னாஃபிரிக்க வாழ் இந்தியர்களுக்காகப் போராடியவர். இந்தியாவிலும் காந்திஜியுடன் இருந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றவர்.
இந்நூலாசிரியர் காந்திஜி மீது அளவிலா நேசம் கெண்டவர். ஆனாலும், காந்திஜியின் சில செயல்பாடுகள் குறித்து, தனக்கு தோன்றிய விமர்சனக் கருத்துகளையும் நேருக்கு நேர் கேட்டு வாதம் செய்தவர். இந்நூலாசிரியருக்கும், காந்திஜிக்கும் இடையே நடந்த விவாதங்கள் எல்லாம் அற்புதமானவை.
காந்திஜி உலகறிந்த ஒரு ஆளுமையாக ஆன பின்னால், ‘அவர் வீட்டில் எப்படி இருப்பார்? அவர் எப்படிப்பட்ட மனிதர்? அவருக்கு எதிலெல்லாம் ஆர்வம் அதிகம் இருந்தது? போராட்ட காலங்களில், தன் சூழலை எவ்வாறு எதிர்கொண்டார்… இப்படி அவரைப் பற்றிய பல கேள்விகளுக்கான பதிலை, அன்றைக்கு இருந்தவர்களும் இந்நூலாசிரியரிடம் அறிய முற்பட்டனர். அதன் விளைவே இந்நூல்.
சத்தியாகிரக போராட்டக் காலமாகிய 1931-ல் வெளியான இந்நூல், அப்போதே பலரின் கவனத்தைக் கவர்ந்தது. பீனிக்ஸ் ஆசிரமத்தில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை, கொடிய விஷம் கொண்ட பாம்பு… போன்ற பல சம்பவங்களை காந்திஜி எப்படி கையாண்டார் என்ற விபரங்கள், ‘பீனிக்ஸ் பண்ணை’ என்ற கட்டுரையிலும், காந்திஜியை கொல்ல வந்தவர் எப்படி மனம் மாறினார் என்ற விபரம் வேறொரு கட்டுரையிலும் விளக்கியுள்ளார்.
இப்படி இந்நூலில் 18 கட்டுரைகள் உள்ளன. காந்திஜியை கருணை மிக்க மனிதராக மற்றொரு கோணத்தில் இந்நூலாசிரியர் படம் பிடித்துக் காட்டுவது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 13/4/2016.