பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள்
பாரதியாரின் புதுச்சேரித் தோழர்கள், வில்லியனூர் தியாகி முத்து. சுந்தரமூர்த்தி, விலை 200ரூ.
பாரதியார், அரவிந்தர், வ.வே.சு. அய்யர், நாகசாமி ஆகியோர் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் (1908-1918) அவர்களுக்கு நண்பர்களாக இருந்தவர்கள் பற்றி விவரிக்கிறது, “இவர்களின் புதுச்சேரி தோழர்கள்” என்ற இந்த புத்தகம். பாரதிக்கும், மற்றவர்களுக்கும் நண்பர்களாக இருந்தவர்கள் பொதுமக்களிடம் புகழ் பெற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆயினும் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள். தேசத்தொண்டு செய்தவர்கள், அவர்களைப்பற்றி இளைய தலைமுறையினர் அறிய இந்நூல் உதவும். சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் நடந்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளையும் நூலாசிரியர் சுவைபட விவரித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.
—-
தங்கர் பச்சானின் சொல்லத் தோணுது, கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ.
அடிப்படையில் ஓர் எழுத்தாளரான தங்கர் பச்சான், ஒளிப்பதிவு, டைரக்ஷன் ஆகிய கலைகளையும் கற்றறிந்ததால், அந்த திரிவேணி சங்கமத்தில் “அழகி”, “பள்ளிக்கூடம்”, “ஒன்பது ரூபாய் நோட்டு” ஆகிய திரைப்படங்களை காவியங்களாக உருவாக்க முடிந்தது. திரைப்படங்களில் மனிதர்களை – அவர்களுடைய குணச்சித்திரங்களை நுட்பமாக சித்தரித்த தங்கர் பச்சான், “சொல்லத் தோணுது” மூலம் சமூக அவலங்களைக் கண்டு சீறிப்பாய்கிறார். கல்வி, அரசியல், கலை, சினிமா இப்படி எல்லாத் துறைகளிலும் தென்படும் குறைகளை சுட்டிக்காட்டுகிறார். அவருடை நெற்றிக் கண்களில் இருந்து வீசும் தீப்பொறிகள், எழுத்துக்களாக சுட்டெரிக்கின்றன. கட்டுரை, சிந்தனைக்கு விருந்து மட்டும் அல்ல, மருந்தும்கூட. இந்தக் கட்டுரைகளை அடிப்படையாக வைத்து, ஒன்றென்ன ஒன்பது சினிமாக்கூட எடுக்கலாம்! அவ்வளவு கருத்துக்கள் பொன்னும் வைரமுமாக ஜொலிக்கின்றன.
நன்றி: தினத்தந்தி, 04/5/2016.