ஈமம்
ஈமம், கவிப்பித்தன், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.440.
வடஆர்க்காட்டின் நிலமொழியை அடையாளமாகக் கொண்ட கவிப்பித்தனின் ‘நீவாநதி’, ‘மடவளி’ நாவல்களைத் தொடர்ந்து வெளிவந்துள்ள மூன்றாவது நாவல் ‘ஈமம்’. விஷம் குடித்து இறந்துபோனதாகக் கருதிய ஒருவன், உடற்கூறாய்வுக்கு முன்னர் பிழைத்துக்கொள்கிறான். அவனை இந்தச் சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் மையச்சரடு. நாவலின் இந்த உள்ளடக்கம் புதியது; வியப்புக்குரியது. நாவல் தரும் வெளிச்சத்தில் மனிதத்திரளின் மேன்மைகள் நொறுங்கி வீழ்வதை வாசகர்கள் உணரலாம்.
கணவன், மனைவிக்கு இடையிலான சாதாரண பிரச்சினைக்காக விஷம் குடிக்கிறான் மகேந்திரன். இது தெரிந்த சுசீலா, ஆறு மாதக் குழந்தையைக்கூடப் பொருட்படுத்தாது தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துபோகிறாள். மகேந்திரனின் நாடித்துடிப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். சுசீலாவின் இறப்பைக் கேள்விப்பட்டு ஓடிவந்த அவள் அம்மாவும் ஆட்டோ மோதி இறந்துவிடுகிறாள். அவள் அப்பாவுக்குப் புத்தி பிசகிவிடுகிறது. இப்படி அடுத்தடுத்து துர்சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்நிலையில், உடற்கூறாய்வில் மகேந்திரன் உயிருடன் இருப்பதைக் கண்டறிகின்றனர். அதன் பிறகு மகேந்திரனின் வாழ்வே ஒரு குறியீடாக வெளிப்படுகிறது. இந்தச் சமூகம் ஒரு மனிதனை இவ்வளவு வன்மத்துடன் நடத்துகிறதா என்று ஆச்சரியப்படும் விதத்தில் மகேந்திரனின் வாழ்க்கை அமைகிறது. அவனைப் பிணம் என்று ஊர் ஒதுக்கலாம்; அம்மாவும் அப்பாவும்கூட அவனைப் பார்த்துப் பயந்து ஓடுகிறார்கள்.
‘ஈமம்’ நாவலின் கதைநாயகன் மகேந்திரன். அவன் தனிநபர் இல்லை; இந்தச் சமூகத் திரட்சியின் ஓர் உதிரி. அவன் சமூகம் வழங்கிய அறிவுக்கு உட்பட்டே சிந்திக்கிறான், செயல்படுகிறான். மகேந்திரனின் ஒட்டுமொத்த நகர்வுகளும் சமூகத்துடனே கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனுக்கும் அவன் இயங்கும் சமூகத்துக்குமான உறவுகளும், ஒரு பிணத்துக்கும் சமூகத்துக்குமான உறவுகளும் வெவ்வேறு இழைகளால் பின்னப்பட்டவை என்பதை இந்த நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. நாவலின் முதல் பகுதியானது மனிதன் – சமூகம் – உறவு என்ற புள்ளியிலும், இரண்டாம் பகுதியானது பிணம் – சமூகம் – உறவு என்ற புள்ளியிலும் இயங்குகிறது.
மகேந்திரன் பிணமாக அறியப்படுவதற்கு முன்பாகக் குடும்பம், காதல், உறவுகளுக்குள் எழும் தன்முனைப்பானது அகங்காரம், சூழ்ச்சி, வீழ்ச்சி எனத் தொடர்ந்து அவனது தற்கொலையில் முடிகிறது. மகேந்திரன் பிணவறையிலிருந்து உயிர்த்தெழுகிறான். இந்தச் சமூகம் அவனைத் தற்போது பிணம் என்றே கருதுகிறது. அவனை அனைவருமே அவ்வாறு கருதுவதற்கு என்ன காரணம்? இந்தக் கேள்வி முக்கியமானது. வாடகைக்குக் குடியிருந்த வீட்டிலிருந்து கைக்குழந்தையுடன் விரட்டப்படுகிறான். நண்பர்கள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள். இறுதியில், சொந்த வீட்டிலிருந்தே வெளியேற்றப்படுகிறான். அவனுக்கு வேலை கொடுக்கவும் பொதுவிடங்களில் ஒதுங்கிக்கொள்ளவும்கூட சமூகம் மறுக்கிறது. ஏற்கெனவே பொதுப்புத்தியில் பதிவாகியிருக்கும் பிணம் குறித்த எதிர் மதிப்பீடுகளும் கூட்டுச் சிந்தனையும்தான் மகேந்திரன் மீதான அச்சத்துக்குக் காரணம் எனலாமா?
சமூகத்தைப் பொறுத்தவரை மகேந்திரன் தற்போது பிணம். இது ஒட்டுமொத்தச் சமூக அமைப்பின் பிரச்சினையாகப் பொதுமைப்படுத்தப் படுகிறது. இதில் மகேந்திரனின் குடும்பம் எந்தப் பக்கம் நிற்கும் என்ற கேள்விக்கு இடமே இல்லை. சமூகத் திரளின் ஓர் அங்கமாக இருக்கும் அவனது குடும்பமும், சமூகத்தின் பொதுப்புத்தி மனநிலைக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறது. இவ்விடத்தில் அம்மா, அன்பு, குடும்பம் ஆகிய புனித பிம்பங்களின் மீது கட்டப்பட்டிருக்கும் மதிப்பீடுகள் வலுவிழந்து போகின்றன. சடங்குகளால் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும் இந்தச் சமூகத்துக்கு மகேந்திரன் என்ற தனிநபர் முக்கியம் அல்ல. அதனால், அம்மாகூட மகனைப் புறக்கணிப்பாளா என்ற கேள்வி அடிபட்டுப்போகிறது.
ஒரு கட்டத்தில், பிணம் என்ற பிம்பம் எதிர்காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதற்கான வாய்ப்பு உருவாகிறது. இரவில் கண்ட கனவிலிருந்து விழிப்பு நிலையை அடையும் மனநிலையை நாவலை வாசிக்கும் வாசகர் இறுதியில் பெறுகிறார். அந்தக் கனவு உருவாக்கிய அதிர்வுதான் ‘ஈமம்’!
நன்றி: தமிழ் இந்து, 1/5/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818