என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.

 

இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர்.

சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி வளர்ச்சி அடைந்திருக்கும்? இவ்வளவு வன்முறை நிகழுமளவுக்கு காஷ்மீரில் அப்படி என்னதான் பிரச்னை? நாட்டு விடுதலைக்காக ஓயாது உழைத்த மகாத்மாவுக்கு நாடு விடுதலை பெற்றபோது எந்த மாதிரியான உணர்வு ஏற்பட்டது? உண்மையில் அவர் மகிழ்ந்தாரா? இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் இந்நூலில் விளக்கங்களும் விடைகளும் உள்ளன.

கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நிகழ்வும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. குறிப்பாக இந்தியா விடுதலையடைந்தபோது, ஒவ்வொரு தலைவரின் மனநிலையும், தவிப்பும், செயல்பாடுகளும் ஒரு புதினம்போல் விறுவிறுப்பாகச் சொல்லப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் பதவி குறித்த கட்டுரையில் பல அரிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்திராகாந்தி, டி.என்.சேஷன் ஆகியோரைப் பற்றி பலரும் அறிந்திராத செய்திகள் பலவும் அவர்கள் தொடர்பான கட்டுரைகளில் இடம் பெற்றுள்ளன.

அரசின் திட்டங்களை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் நிலையில் அத்திட்டங்களை உருவாக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வயது வரம்பு இருப்பதுதானே சரி என்று ராஜேந்திர பிரசாத் கேள்வி எழுப்பியதும், அதனைத் தொடர்ந்து அரசியல் நிர்ணய சபை எடுத்த முடிவும் சுவையானவை.

தலைவர்களுக்கிடையே குறைந்து வரும் அரசியல் நாகரிகம், மெல்ல மெல்ல சிதைந்து வரும் நாடாளுமன்ற மரபுகள் – இவை குறித்து ஆசிரியர் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இவற்றில் பெரும்பாலான கட்டுரைகள் தினமணியில் வெளிவந்தவை என்பது கூடுதல் சிறப்பு.

நன்றி: தினமணி,20/9/21.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031644_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *