என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
என் நாடு என் மக்கள் எனது போராட்டம், அடால்ஃப் ஹிட்லர், தமிழில் ஆர்.சி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 352, விலை 175ரூ.
உலகின் மிகக் கொடிய சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் சுயசரிதை இந்நூல். அவருடைய இளமைக் காலம் முதல் 1918 வரையில் நிகழ்ந்த அவருடைய சொந்த வாழ்க்கை, அரசியல் நிகழ்வுகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சாதாரண ஓவியராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர், உலகின் மாபெரும் சர்வாதிகாரியாக மாற அவருடைய கம்யூனிச எதிர்ப்பு சிந்தனை முறையே காரணமாக இருந்திருக்கிறது.
“ஒரு கொள்கை பரவுவதைத் தடுக்க கலப்பற்ற பலாத்காரம் பயன்படும் என்றால், அதை உறுதியுடனும் இடைவிடாமலும் பயன்படுத்தி வர வேண்டும். அப்படியானால்தான் வெற்றி பெற முடியும்’‘
“எப்போதுமே, பிரசாரமானது எதிரிகளின் அநீதியை மாத்திரமே இடைவிடாமல் வலியுறுத்திக் கூறுவதாக இருக்க வேண்டும்’‘
“பத்திரிகைச் சுதந்திரம்‘’ என்ற கூக்குரலுக்குப் பயந்து, பத்திரிகைகளை இஷ்டப்படி நடந்து கொள்ள விட்டுவிடக் கூடாது’‘
“விவாதம், வாக்குவாதம் ஆகியவற்றுக்கு இடம் கொடுக்கும் முறையைத் தவிர்த்துவிட வேண்டியது மிக அவசியம்“ என்பன போன்ற சர்வாதிகார கருத்துகளைக் கொண்ட அவர், யூதர்களின் எதிரியாகவும் இருந்தார்.
தனிநபர் முயற்சி, பிடிவாதம், நினைத்த செயலை முடிக்க எந்த வழிமுறையையும் கையாள்வது, ஈவிரக்கமற்ற மனோபாவம் இவற்றின் மொத்தம் உருவம்தான் ஹிட்லர் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.
நன்றி: தினமணி, 13/2/2017.