போர்த் தொழில் பழகு
போர்த் தொழில் பழகு, வெ. இறையன்பு, புதிய தலைமுறை பதிப்பகம், பக். 156, விலை 250ரூ.
இளைய தலைமுறை எப்படிப்பட்டதாக உருவாக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வரும் இந்நூலாசிரியர், இளைஞர்களிடம் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் உருவாக தன்னம்பிக்கையும், துணிவும் வேண்டும். அது உருவாக ‘போர்க் குணம்’ வேண்டும் என்கிறார்.
’ரௌத்திரம் பழகு’ என்று மகாகவி பாரதியும் கூட வலியுறுத்தியுள்ளார். தீமைகளையும், அடக்குமுறைகளையும் கண்டு உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் நியாயமான கோபம்தான் போர்க்குணம். இக்குணம் உடையவர்களால்தான் உலகம் பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைகிறது. அதைப் பற்றி விவரிப்பதே இந்நூலின் நோக்கம்.
சிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இந்நூலாசிரியர், புதிய தலைமுறை இதழில தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று, தற்போது நான்காவது பதிப்பாக வெளியாகியுள்ளது. ‘சத்தமில்லா யுத்தம்’ என்ற முதல் கட்டுரையில், பள்ளிக்கூட நாட்களில் சிறுவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதே ஆக்கப்பூர்வமான விஷயம் என்று விளக்கியுள்ளது புதுமையாக இருந்தாலும், அதில் எந்தளவு உண்மையும் உள்ளது என்பதை அறிய முடிகிறது.
‘போர் அக்கப்போர் அல்ல’ என்ற கட்டுரை, இன்றைய பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் கூட, நாடுகளுக்கு இடையே நடந்த போர்களும், பகைகளும் ஒரு பின்னணியாக இருந்ததை சரித்திர காலம் தொட்டு பல நிகழ்ச்சிகளைக் கொண்டு விளங்குகிறது.
இப்படி இந்நூலில் உள்ள 30 கட்டுரைகளும் படிக்க விறுவிறுப்பாக மட்டுமல்ல, எதிர்மறையிலும் நேர்மறை உள்ளது என்பதற்கான பல சான்றுகளை அளித்திருப்பது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 25/1/2017.