இணைந்த கல்வி உருவாக்கம்
இணைந்த கல்வி உருவாக்கம், டாக்டர் கி.உமா மகேஸ்வரி, சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 160, விலை 100ரூ.
அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் உயர்நிலைக் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என்னும் எழுச்சிமிக்க வாசகங்கள், இந்த 21ம் நூற்றாண்டில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
கல்விச் சிந்தனைகளும், கோட்பாடுகளும் ஆங்கிலத்தில் இருப்பதால், அனைவருக்கும் அது எளிதில் சென்று சேராமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அவரவர் தாய் மொழியில், கல்விச் சிந்தனை பரவ வேண்டும் என்னும் உயர் நோக்கத்தில் தமிழில் உருவாக்கப்பட்டு உள்ளது இந்நூல்.
செவித்திறன், பேச்சுத் திறன், பார்வைத்திறன், மனவளர்ச்சிக் குறைபாடு உடையோர் என்னும் இயலாமை கொண்டவர்களுக்கு, கல்வி வழங்கும் முறை குறித்தும், கற்கும் திறன் குறைபாடு குறித்தும், இந்நூல் தெளிவுபடுத்துகிறது. சுதந்திர இந்தியாவின் கல்விக் கொள்கை, கோத்தாரிக் கல்விக் கொள்கை, தேசிய கல்விக் கொள்கை முதலான கல்விக் கொள்கைகள் குறித்த தெளிவான வரையறையை, இந்நூல் வழங்குகிறது.
கல்வியியலில் பட்டப்படிப்பு மேற்கொள்வோருக்கும், ஆய்வு மேற்கொள்வோருக்கும் இந்நூல் பயன்படும்.
-முகிலை ராசபாண்டியன்.
நன்றி: தினமலர், 12/3/2017.