இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி

இந்திய இலக்கியச் சிற்பிகள் ராஜாஜி, ஆர்.வெங்கடேஷ், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ.

தாம்புக் கயிறும் ராஜாஜியும்

Tamil_News_large_1517573_318_219

ராஜாஜியோடு இலக்கியப் பயணத்தில் உடனிருந்தவர், மீ.ப.சோமு. ராஜாஜி அவ்வப்போது மீ.ப.சோமுவின் வீட்டிற்குப் போவது உண்டு. மாடியில் வீடு. உயரமான சுழல் படிகள்.கைப்பிடி இருக்காது. ராஜாஜி ஏறி வருவதற்கு வசதியாக ஒரு தாம்புக் கயிற்றைத் தொங்கவிட்டிருப்பார்கள். தள்ளாத வயதில், தாம்புக் கயிற்றை பிடித்துக்கொண்டு ஏறி,மாடிக்கு வருவார் ராஜாஜி. காரணம், இலக்கிய நட்பு . . .

ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்று மதிப்பிடுகிறார்கள் அவருடைய அபிமானிகள். இல்லை,அவர் ஒரு பழமைவாதி என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். இதில் எது சரி என்பதைக் காலம்தான் கணிக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, இலக்கிய உலகில் ராஜாஜியின் பங்களிப்பைப் பற்றி வெளியாகி உள்ள இந்த நுால் ஒரு அரிய வரவு என்று சொல்லலாம்.

மிகப் பெரிய அளவில் ஆய்வு செய்து அதனுடைய சாராம்சத்தைக் காய்ச்சி, கல்கண்டு, ஏலக்காய் சேர்த்துக் கொடுத்து உள்ளார் நுாலாசிரியர். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் எவரும், ராஜாஜியோடு வாழ்ந்துவிட்ட, அவரை ஓரளவு அறிந்துவிட்ட அளவுக்குத் தன்னைத் தயார் செய்துகொள்ள முடியும்.

‘தமிழ்ச் சமூகத்துக்கு அவரது பங்களிப்பு அபாரமானது. முக்கியமாக ஏழை எளியவர்கள் வாழ்க்கை துன்பமயமாக இருப்பதற்கு அவர் இரண்டு காரணங்களைக் கண்டார். 1. மது, 2. தீண்டாமை. இவ்விரண்டையும் நீக்கிவிட்டால், சாதாரண மக்களின் வாழ்வு ஒரளவுக்கேனும் மேம்படும் என்பது அவரது எண்ணமாக இருந்தது.

‘அவரது அரசியல் வாழ்க்கை முழுவதிலும் இவ்விரு சீர்திருத்த முயற்சிகளில் அயராது போராடி வந்துள்ளார். எத்தனை எதிர்ப்புகள், விமர்சனங்கள், கண்டனங்கள், இடர்கள் வந்தபோதும் தம்முடைய உறுதியை விட்டுவிடாமல் செயல்பட்ட உண்மையான சமூகப் புரட்சியாளர் ராஜாஜி’ என்று எழுதப்பட்டுள்ளது. (பக்.12)

இன்னமும் ராஜாஜியின் லட்சியங்கள் முழுமையாகக் கைகூடவில்லை என்பது கசப்பான உண்மை.

குழந்தை இலக்கியம், தலையங்கம், மொழிக்கான யோசனைகள், கவிதைகள், நாடகம், விளக்க உரை, நய உரை என்று பல்வேறு களங்களில் தன்னுடைய வல்லமையையும், நுண்ணறிவையும் வைத்துக் கொண்டு பந்தாடியிருக்கிறார் ராஜாஜி.

எந்தக் களத்தில் ஆடினாலும் அந்தக் களத்தில் முத்திரைப் பதிக்கும் திறமை அவருக்கு இருந்திருக்கிறது. அரசியலாக இருந்தாலும் உபநிடத விளக்கமாக இருந்தாலும் வாசகர்களுக்குச் சலிப்பு வராமல் எழுதுவது அவருடைய சாமர்த்தியம். அத்தனை விஷயங்களையும் ஒரு மதிப்புரையில் சொல்ல முடியாது என்பதால், இதழியலை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.

ராஜாஜியின் இதழியல் பங்களிப்பை நான்கு பகுதிகளாகப் பகுத்துக் கொள்ளலாம். முதல்பாதி, சேலத்தில் வழக்கறிஞராக இருந்த போது, ஆங்கில அறிவியல் சொற்களுக்கு இணையாக தமிழ்க்கலைச் சொற்களை உருவாக்குவதில் அவர்
கொண்டிருந்த ஈடுபாடு. 1916ல் ‘விஞ்ஞானத் தமிழ் பதங்கள் சங்கம்’ என்ற ஒன்றை அவர் ஆரம்பித்தார். இந்த சங்கத்தின் சார்பாக ‘தமிழ் சாஸ்திர பரிபாஷைச் சங்கத்தாரின் பத்திரிகை’ என்ற மாத இதழ் வெளியிடப்பட்டது.

நான்கு இதழ்கள் மட்டுமே வெளியான இந்த இதழுக்கு, ராஜாஜியும் வேங்கடசுப்பையர் என்பவரும் ஆசிரியர் பொறுப்பில் இருந்தனர். பயிரியல், உயிரியல், வேதியியல், இயற்பியல், வானியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தமிழ்மொழியில் நுால்கள் வெளியிட விரும்புகிறவர்களை எதிர்நோக்கும் மிகப்பெரிய துன்பம், அறிவியல் கருத்துக்களைக் கூறப் போதிய அளவில் சரியான கலைச்சொற்கள் இல்லாததுதான் என்று முதல் இதழ் தெரிவிக்கிறது.
இந்த இதழ்களை மஹாகவி பாரதியாரும், சுப்ரமணிய சிவாவும் வரவேற்றுள்ளனர் என்பது முக்கியமான செய்தி. கலைச் சொற்களை உருவாக்குவதற்குத் தமிழில் தொடங்கப்பட்ட முதல் பத்திரிகையாக இன்றும் இந்த இதழ் கவனம் பெறுகிறது. (பக்.79)

எல்லாம் சரி. எதற்காக இந்த நுாலைப் படிக்க வேண்டும்? நாட்டு மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டும் என்பதற்காக வரலாறுதோறும் பல்வேறு யோசனைகள்
தெரிவிக்கப்பட்டன. கிரேக்கத் தத்துவ ஞானி பிளாட்டோ எழுதிய, ‘குடியரசு’ இதில்
முதலிடம் பெறுகிறது.

விஷய ஞானம் உள்ளவராக, கலைகளில் தேர்ச்சி பெற்றவராக, அறிஞராக,
தத்துவவாதியாக பக்குவம் பெற்ற ஒருவரிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் என்பது பிளாட்டோவின் பரிந்துரை.

கிரேக்கத்து மெய்யியலை தமிழகம் ஓரளவில் சாத்தியப் படுத்தியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

-சுப்பு.

நன்றி: தினமலர், 8/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *