ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்
ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.125.
ஒரு சிலர் குறித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும். அவர்கள் குறித்த சம்பவங்களும், செயல்பாடுகளும் ஏற்படுத்தும் வியப்பு அத்தகையவை. மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதற்குக் காரணம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஜே.பி.சந்திரபாபு.
சந்திரபாபு நடித்த திரைப்படங்கள் 70. அதில் 25 திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெறவில்லை. 45 படங்களில் 65 பாடல்களைப் பாடியிருக்கிறார். அந்த 65 பாடல்களையும், அவை இடம் பெற்ற படங்கள், அந்தத் திரைப்படங்கள் வெளியான ஆண்டு மட்டுமல்லாமல், அதன் தயாரிப்பு, இயக்கம், இசை ஆகியவையும், அந்தப் பாடல்களை இயற்றிய பாடலாசிரியர்களையும் பதிவு செய்து கொடுத்திருக்கிறார் பொன்.செல்லமுத்து.
நகைச்சுவை நடிகர்களில் காளி என்.ரத்தினமும், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் சொந்தக் குரலில் பாடி நடித்தார்கள். ஆனால் வேறு நடிகர்களுக்காக அவர்கள் குரல் கொடுத்ததுமில்லை; பாடியதுமில்லை. சந்திரபாபு அப்படியல்ல. அவர் தனக்காகவும் பாடி இருக்கிறார், பிறருக்காகவும் பாடி இருக்கிறார். தனக்காகப் பாட பிற பாடகர்களையும் அனுமதித்திருக்கிறார்.
அவருடைய தந்தை ரோட்ரிக்ஸ், காங்கிரஸ் தலைவர் தீரர் சத்தியமூர்த்தியின் நண்பர். அதனால் அவரது வீட்டிலேயே வளைய வந்து கொண்டிருந்தவர் சிறுவனாக இருந்த சந்திரபாபு. குழந்தைகளாக இருந்த சந்திரபாபுவையும் தீரர் சத்தியமூர்த்தியின் மகள் லட்சுமியையும் பார்த்துக் கொள்வது, சத்தியமூர்த்தியின் அணுக்கத் தொண்டரான காமராஜர். அதனால்தான் சந்திரபாவுவின் திருமணத்துக்கு முதல்வராக இருந்த காமராஜர் வந்து வாழ்த்தியதாகச் சொல்வார்கள்.
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட சந்திரபாபுவின் தந்தை, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். இலங்கையில் வளர்ந்த சந்திரபாபுவுக்கு சிங்கள மொழியும் தெரியும். இந்தியா திரும்பிய சந்திரபாபுவின் தந்தைக்கு ராம்நாத் கோயங்கா, ஏ.என்.சிவராமன் ஆகியோரிடமுள்ள சுதந்திரப் போராட்டத் தொடர்பால் தினமணியில் வேலை கிடைத்தது. சந்திரபாபுவின் சென்னை வாழ்க்கைக்கும், திரைப்பட வாய்ப்புக்கும் அதுதான் வழிகோலியது.
சந்திரபாபு நடித்த படங்கள், அவர் பாடிய பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் குறித்த தெரியாத விவரங்களையும் உள்ளடக்கி புத்தகமாக்கியிருக்கிறார் பொன். செல்லமுத்து.
ஜே.பி.சந்திரபாபு திரைப்படப் பாடல்கள் குறித்த புத்தகம், வெறும் தொகுப்பல்ல, திரையுலகம் குறித்த முக்கியமான தகவல் பெட்டகம்.
நன்றி: தினமணி, 26/7/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818