கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200.

இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்?

நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் மிகத் தெளிவாக கூறிய பதில்களின் தொகுப்பே இந்நூல்.

சிறுதெய்வ வழிபாட்டைப் பற்றி விளக்கும்போது, "எந்தச் சிறு தெய்வமும் இந்து பொதுமரபில் எங்கோதான் இருந்து கொண்டிருக்கும். கண்டிப்பாக முற்றிலும் வெளியே இருக்காது… இந்து மதம் ஓர் எல்லையில் உயர் தத்துவமும் மறு எல்லையில் பழங்குடி நம்பிக்கைகளும் ஆசாரங்களும் நின்று கொண்டு தொடர்ச்சியாக நிகழ்த்தும் ஓர் உரையாடல் என்கிறார் நூலாசிரியர்.

சோழர்காலகட்டம் முதல், தமிழகத்தில் பெருமதங்கள் வேரூன்றிவிட்டிருக்கின்றன. அவற்றை ஒட்டி உருவான பிரமாண்டமான பக்தி இயக்கம், தமிழகத்தின் இன்றைய கலைகள், சிந்தனைகள், வாழ்க்கைமுறைகள் எல்லாவற்றையும் தீர்மானித்தது… பக்தி இயக்கம் பக்தியையே ஆன்மிகத்தின் ஒரே முகமாகக் காட்டியது. அந்த பக்தியும் பெருமதங்களுக்குள் நிற்கக் கூடியதாக வடிவமைத்தது என்று இன்றைய இந்துமதத்தின் வளர்ச்சிநிலைகளைத் தெளிவாக விளக்குகிறார்.

கோயில்களில் சம்ஸ்கிருதம் வழிபாட்டு மொழியாக இருப்பது ஏன்? என்ற வினாவுக்கு, மதம் நாடு, மொழி சார்ந்த எல்லைக்குள் நிற்பதல்ல, ஆந்திரத்து பக்தர் கன்னியாகுமரியில் வழிபட வேண்டும். கன்யாகுமரி பக்தர் பத்ரிநாத்தில் வழிபட வேண்டும். ஆகவேதான் ஒரு பொதுவழிபாட்டு மொழிக்கான தேவை ஏற்பட்டது. சம்ஸ்கிருதம் அந்த இடத்தை அடைந்து பல நூற்றாண்டுகளாகின்றது என்று கூறுகிறார்.

இந்து மதம், வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக் கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கி  கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை” என இந்து மதம் பற்றிய புரிதலை ஒருவர் வந்தடைய இந்நூல் உதவும்.

நன்றி: தினமணி, 12/2/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *