கம்ப நதிக்கரையினிலே
கம்ப நதிக்கரையினிலே, ஆர். குறிஞ்சி வேந்தன், வானதி பதிப்பகம், பக்.100, விலை 70ரூ.
கம்பர் காவியத்தின் பல அழகுகளைக் கூறும் நூலாக அமைந்துள்ளது. கம்பனைச் சுவைக்கும் அன்பர்களுக்கு நல்லதொரு விருந்தாக இந்நூல் திகழ்கிறது எனலாம். ‘கம்ப ராமாயணத்தை விதை நெல்லைப் போல பாதுகாத்து எதிர்காலச் சமூகத்திடம் தந்து விட வேண்டும்’ என்ற நூலாசிரியரின் கனவுக்கு இந்நூல் ஓர் எடுத்துக்காட்டு எனலாம்.
இந்நூலில் 12 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் பட்டை தீட்டப்பட்ட வைரமாக விளங்குகின்றன. ‘நதியின் பிழையன்று நறும்புனலின்மை’ என்றும், ‘நின் பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்றும், ‘பிரிந்தவர் கூடினால் பேசல் வேண்டுமோ?’ என்றும், ‘ஆயிரம் ராமர்கள் நின்கேழ் ஆவரோ’ என்றும் கம்பரின் பல வைர வரிகளை ஆசிரியர் விளக்குவதும் (பக். 11-17), ‘காகுத்தன் வீழ்த்திய கனிகள்’ என்றும், ‘கணைகள் தப்பிய கணங்கள்’ என்றும், நுட்பமாகத் தலைப்பிட்டு விளக்கப்பட்டுள்ளன.
எல்லா உயிர்களுக்கும் தடுமாற்றங்கள் உண்டு என்பதை அனுமனின் சீற்றத்தால் விளக்குவதும் அருமை. தனி மனித ஒழுக்கம், வீர வாழ்வு, நல்லரசு, சகோதரத்துவம் போன்றவற்றுக்கும் அப்பாலும் பல்வேறு கொள்கைகளை கம்பக் காவியம் வலியுறுத்துகிறது என்று கூறி அவற்றை விளக்குவதும் (பக். 63-70), இன்றைய சமுதாயத்தை சிறுமைகளிலிருந்து மீட்டுச் செப்பனிடுவதற்கு கம்பரே தேவை என்று விளக்குவதும் நூலாசிரியரின் நுண்ணிய பார்வையைக் காட்டுவன.
எளிய, இனிய தமிழில் வந்துள்ள இந்நூலை, கம்பரின் அன்பர்கள் தவறாது படிக்க வேண்டும்.
-டாக்டர் கலியன் சம்பத்து.
நன்றி: தினமலர், 6/1/2017.