கந்தர்வன்
கந்தர்வன், ஜன நேசன், சாகித்திய அகாதெமி, பக்.112, விலை 50ரூ.
எழுத்தாளர் கந்தர்வனின் இயற்பெயர் க. நாகலிங்கம் என்பதாகும். வானம் பார்த்த வறண்ட பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் சிக்கல் கிராமத்தில் பிறந்தவர் கந்தர்வன். 60 ஆண்டு காலமே வாழ்ந்த எழுத்தாளர் கந்தவர்வன் எழுதிய, 30 ஆண்டுகளில், 62 கதைகள், 100கவிதைகள் மற்றும் நாடகம், கட்டுரை, நூல் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார்.
கந்தர்வனின் கடிதங்களும், சிறப்புத் தன்மை வாய்ந்தவை. சி.ராஜநாராயணன், தி.க.சி., வல்லிக்கண்ணன், செயப்பிரகாசம் முதல், இன்று சிறந்த படைப்பாளிகளாகக் கருதப்படும் வண்ணதாசன் உட்பட எண்ணற்ற எழுத்தாளுமைகளுக்கு கடிதங்கள் எழுதி உள்ளார். அக்கடிதங்கள் இலக்கியத் தரமாகவும், எள்ளலும், கோபமும், கவித்துவமும், தருக்கமும், உருக்கமும் மிக்கதாக உள்ளன.
இவரது படைப்புகளில் நில உடைமையாளர்களின் இயல்புகளையும், கிராமப்புற ஏழைகளின் எளிய வாழ்க்கையையும், நகர்ப்புற நடுத்தர மக்களிடையே மிளிரும் மனித நேயத்தையும், மகளிர் மற்றும் தலித்துகளின் வாழ்வியல், அவலங்களையும், எழுச்சியையும் பிரசார நெடியின்றிக் கலாபூர்வமாகப் பதிவு செய்தவர்.
நளினமான எள்ளலுடன் குறைந்த சொற்களில் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துவதில் வல்லவர். ஒரு தேர்ந்த நாடகக் கலைஞனைப்போல, தான் அழாமல் வாசிப்பவை அழ வைக்கும் வரிகள் கந்தவர்வனுடையது.
கந்தர்வன் 1970ல், ‘சனிப்பிணம்’ என்னும் முதல் கதையை எழுதினார். பின். 1976ல் தொடர்ந்து அவர், 2003 வரை, 63 கதைகள் எழுதியுள்ளார். அவற்றில் ஆறு கதைகளாவது உலகத் தரம் வாய்ந்தவை எனப் படைப்பாளுமை மிக்க பலர் கருதுகின்றனர்.
அலங்கார வார்த்தைகள், கருத்து இருண்மை, வடிவச் சோதனை, ஜிகினாச் சொல்லடுக்கு போன்றவற்றிலிருந்து விட்டு, விடுதலையாகி, எளிமை, தெளிவு, வெளிப்படை போன்ற அம்சங்களோடு இவரது கவிதைகள் தோன்றுவது சிறப்பாகும்’ என்று முனைவர் க.கனகராசு கூறுகிறார். இதுவே இந்த நூலின் சிறப்பை காட்டுவதாகும்.
-எஸ். குரு.
நன்றி: தினமலர், 6/1/2017.