கம்பனில் இசைத்தமிழ்
கம்பனில் இசைத்தமிழ், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், உமா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ.
இயற்பா – இசைப்பா இவற்றிற்குள்ள வேறுபாடு, இசைத்தமிழ் மரபு போன்றவற்றை விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். இசைத்தமிழ் மரபு என்னும் வித்து, தொல்காப்பிய காலத்திற்கு முன் விதைக்கப்பட்டு, சங்க காலத்தில் ஆழமாக வேரூன்றி, காப்பிய காலத்தில் முகிழ்ந்து வளர்ந்தோங்கி, கம்பராமாயணத்தில் மலர்ச்சோலையாக மணம் பரப்புகிறது என கூறுகிறார்.
இன்றைய இசையியலில் வழங்கி வருகிற தாளங்களுக்கான மூலவேர்கள் சங்க இலக்கியங்களில் வெகுவாக காணப்படுகின்றன. பண்டைக்கால இசைத்தமிழ் நூல்களில், 108 தாளங்களும், 103 பண்களும் சொல்லப்பட்டுள்ளன.
இசைக்கருவிகளை தோற்கருவிகள், கஞ்சக்கருவிகள், நரம்புக்கருவிகள், காற்றுக் கருவிகள் என சங்க நூல்களில் காணப்படும் இசைக்கருவிகளை சுட்டிக்காட்டி யாழ் – வீணையாகவும், தொல்காப்பியர் கூறும், 20 வண்ணங்களை பற்றி விரிவாக விளக்கி, வண்ணத்திற்கும், சந்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்கிறார்.
சந்தம் என்பது, பொது ஓசை. வண்ணம் என்பது கட்டுப்பட்ட ஓசை. கம்பராமாயணப் பாடல்களில் தொல்காப்பியர் கூறும் வண்ணங்களும், பிற சந்தங்களும் அமைந்துள்ள பாங்கினை சான்றுகளோடு நிறுவி உள்ளார்.
-புலவர் சு. மதியழகன்.
நன்றி: தினமலர், 2/7/2017.