கன்னியாகுமரிக் கோயில்

கன்னியாகுமரிக் கோயில், சி.பிரதாபசிங், காவ்யா, பக்.432, விலை 430ரூ.

கன்னியாகுமரிக் கோயில் என்ற முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவம் இந்நூல். கன்னியாகுமரிக் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி தெய்வத்தின் கோயிலின் வரலாற்றை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கி.மு.ஆறாம் நூற்றாண்டிலேயே கன்னியாகுமரிக் கோயில் இருந்திருக்கலாம் என்று கருதும் நூலாசிரியர், அதற்குப் பின் பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் கோயிலைப் பற்றி ஆய்வு செய்கிறார்.

கோயில் தோன்றிய காலத்திலிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் கோயில்களில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளை வைத்து கி.பி.765 முதல் 815 வரை குமரிப் பகுதி, வரகுண மகாராஜன் என்ற பாண்டிய மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது, கி.பி.12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட பராந்தகனின் கல்வெட்டு குமரிக் கோயிலில் காணப்படுவது, அதில் அவனுடைய செயல்பாடுகள் குறிக்கப்பட்டிருப்பது, விஜயநகர ஆட்சி, மதுரை நாயக்க மன்னர்கள் ஆட்சி, பாலமார்த்தாண்டன் என்னும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சி ஆகியவற்றுக்கு உட்பட்டிருந்தது உட்பட பல வரலாற்றுத் தகவல்களை இந்நூலின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

இக்கோயிலில் பண்டைக் காலம் முதல் இப்போது வரை செய்யப்படும் வழிபாடுகள், விழாக்கள், கோயில் திருவிழாக்களின் போது பரிவட்டம் பெறத் தகுதி பெற்றவர்கள் பற்றிய விவரங்கள், கோயில் பணியாளர்கள், அவர்களுடைய பணிகள், அவர்களுக்குத் தரப்பட்ட மாதச் சம்பள விவரங்கள், குமரிக் கோயிலுக்கு மக்கள் வழங்கிய நன்கொடைகள், கோயிலில் உள்ள சிற்பங்கள், கோயிலில் நடந்த இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் என குமரிக்கோயில் தொடர்பான பல தகவல்கள் இந்நூலில் உள்ளன.

நன்றி: தினமணி, 6/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *