த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள்

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், வே.குமரவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.508, விலை 415ரூ.

சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான
த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை அவர் எழுதியிருப்பதால், பெரும்பாலான நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன.

முதல் சுதந்திரப் போர் என்று பரவலாக நம்பப்படுகின்ற 1857 புரட்சிக்கு முன்பே, தமிழ்நாட்டில் 1800 – 1801 இல் வேலுநாச்சியார், கோபாலநாயக்கர், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை என அனைத்து குறுநில மன்னர்களும், பாளையக்காரர்களும் திரண்டு பெரும்படையோடு ஆங்கிலேயரை எதிர்கொண்ட 'கோவை புரட்சி' , 1806 இல் நடந்த வேலூர் புரட்சி ஆகியவை நடந்திருப்பதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நம்முடைய உறவுகளிடமும் நண்பர்களிடமும் தாய்மொழியில் பேசுகிற போதுதானே ஓர் உண்மையும், யதார்த்தமும் இருக்கும். உயிர் இருக்கும் என்று தாய்மொழிப் பற்று பற்றிய ஒரு வினாவுக்கு பதில் அளித்திருக்கிறார்.

மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவதைப் பற்றி, நாடு கெட்டுப் போகாமல் இருப்பதற்கு நல்ல மாணவர்கள் நல்ல அரசியலுக்கு வர வேண்டும். நல்ல சமூகச் சுழலில்தானே நல்ல மனிதர்கள் வாழ முடியும் என்கிறார்.

இவ்வாறு நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளைப் பற்றி தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில், எந்தப் பிரச்னையையும் மிக எளிமையான முறையில் விளக்கும் ஸ்டாலின் குணசேகரனின் இந்த நேர்காணல்களின் தொகுப்பு, சமகாலத்தை சரியாகப் புரிந்து கொள்வதற்கு மிகவும் உதவும்.

நன்றி: தினமணி, 6/11/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *