கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை
கவி கா.மு. ஷெரீப்பின் படைப்பாளுமை, இரா. சம்பத், சாகித்திய அகாதெமி, பக். 224, விலை 110ரூ.
18 அறிஞர்களின் பயனுள்ள தொகுப்பு
இன்றைக்கு அறுபதைக் கடந்து நிற்பவர்களை அந்தக் காலத்தில் கிறங்க அடித்த பல திரையிசைப் பாடல்களுள் ஒன்று ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ பாடல். இதுபோன்ற பல பாடல்களுக்கு இறவா வரம் தந்தவர் கவி.மு.ஷெரீப்.
மகாபாரத பீஷ்மரின் தியாகத்தைப் போற்றுகிற ‘மச்சகந்தி’, ‘பல்கீஸ் நாச்சியார் காவியம்’ ஆகிய காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், அரசியல், மொழியியல் என்று கவிதைக்கு அப்பாலும் பல துறைகளில் தம்மை அடையாளம் காட்டிக் கொண்டவர் கா.மு. ஷெரீப்.
பத்திரிகை ஆசிரியராகவும் திகழ்ந்த கவிஞர் 1948-1956 காலகட்டத்தில் எழுதிய தலையங்கங்களே தனி நூலாக வெளிவந்திருக்கிறது. அவருடைய நூற்றாண்டையொட்டி சாகித்திய அகாதெமி பதினெட்டு அறிஞர்களிடமிருந்து பெற்ற ஆய்வுக் கட்டுரைகளின் பயனுள்ள தொகுப்பு இது.
ஷெரீப் அவர்களே எழுதியுள்ள ‘வீழ்ந்துபட்ட தமிழைத் தாழ்ந்துவிடாமல் காப்பாற்றியவர்கள் தமிழ் முஸ்லிம்களே’ என்ற கட்டுரை மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது. 13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு 400 ஆண்டுகள் பெருங்காப்பியங்கள் தோன்றாமலிருந்த நிலையில் அக்குறையைப் போக்கியவர் ‘சீறாப் புராணம்’ தந்த உமறுப்புலவர் என்ற செய்தி சிந்தனைக்குரியது.
அவ்வாறே அறுநூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்துள்ளனர் என்ற செய்தியும் கவனம் பெற வேண்டியது. மண்டபம் மரைக்காயர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படும் முகம்மது இப்ராஹிம் சாயபு என்பவர்தான் முதல் தமிழ் உரைநடை நூலான ‘விக்கிரமாதித்தன்’ கதையை எழுதி வெளியிட்டிருக்கிறார். பயனுள்ள கட்டுரைகள்.
நன்றி: கல்கி, 20/8/2017.