கவிமணி வரலாற்றாய்வாளர்
கவிமணி வரலாற்றாய்வாளர், அ.கா. பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். பக்.104, விலை ரூ.85.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை என்றவுடன் நம் நினைவுக்கு வருபவை மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம் போன்ற கவிதை நூல்களும், உமர்கய்யாம், ஆசிய ஜோதி போன்ற மொழிபெயர்ப்பு நூல்களும், பல வாழ்த்துப் பாக்களும், சில குழந்தைப் பாடல்களுமே.
ஆனால், அவர் தமிழறிஞர்கள் குறித்தும், புலவர்கள் குறித்தும், தேசியம் குறித்தும், இசை-நாடகம் குறித்தும் நிறைய எழுதியிருக்கிறார். குறிப்பாக, கல்வெட்டு ஆய்வு குறித்து மட்டும் தமிழில் எட்டு நூல்களும், ஆங்கிலத்தில் பதினாறு நூல்களும் எழுதியுள்ளார். அவற்றை அடிப்படையாகக் கொண்டு கவிமணியை சிறந்த வரலாற்றாய்வாளர் என நிறுவுகிறது இந்நூல்.
கவிமணி தனது சாசனங்களும் விநோத வியாக்கியானங்களும் எனும் கட்டுரையில் தென்னிந்திய கல்வெட்டுகளில் காணப்படும் ஐம்படைப் பருவம் என்பதற்கு மன்மதன் காதல் எழுப்பும் பருவம் என்று பொருள் கொள்ளுதல் தவறு. அது சங்கு, சக்கரம், தண்டு அணிந்து விளையாடும் பருவம் என்று பொருள் கொள்வதே சரி என்கிறார். கரியமாணிக்கபுரம் என்ற ஊர்க் கல்வெட்டில் பறவைக்காசு என்ற சொல்லுக்கு ஒருவகைக் காசு என்ற பொருள் தவறு.
அது பறவைக்கரசு என்னும் ஆட்பெயரே என்று கூறுகிறார். திருவிதாங்கூர் ஸ்டேட் மேனுவல் நூலில் ஒரு செய்திக்குக் கல்வெட்டுச் சான்று இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கவிமணி அதற்கான சான்றைத் தேடிக் கண்டுபிடித்து அதனைப் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறார். இவ்வாறு அவர் வரலாற்றாய்வாளராக அரும்பணியாற்றியிருக்கிறார்.
கவிமணியின் வரலாற்றாய்வுகளோடு அவரது வாழ்வின் பல முக்கிய தருணங்களையும் காலக்குறிப்புடன் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். கவிமணியின் வாழ்வும் நூலாசிரியரின் உழைப்பும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
நன்றி: தினமணி,27/9/2018
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027179.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818