பாழ்நிலப் பறவை
பாழ்நிலப் பறவை, லீலாகுமாரி அம்மா, இரா.பாவேந்தன், கோ.நாகராஜ், சந்தியா பதிப்பகம், பக்.120; ரூ.115.
கேரளாவின் காசர் கோடு மாவட்டத்தில் முந்திரி விளைச்சலுக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிகளை ஒழிக்க ஹெலிகாப்டரிலிருந்து எண்டோசல்பான் பூச்சிக் கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அது காற்றில் பரவி, ஆடு, மாடுகளை, மனிதர்களைக் கொன்றது. சிறுவர், சிறுமிகளை முடமாக்கியது.
இது மாத்ரு பூமி நாளிதழின் புகைப்படக் கலைஞர் மதுவின் முயற்சியால் பரவலான மக்களுக்குத் தெரிய வந்தது. அரசுப் பணி செய்து கொண்டிருந்த, ஒரு குடும்பத் தலைவியான லீலாகுமாரி அம்மாவுக்கும் தெரிந்தது. அவர் மக்களைத் திரட்டி பூச்சிக் கொல்லி மருந்து தெளிப்பதற்கு எதிராகப் போராடினார்.
முன்சீப் நீதிமன்றம் தொடங்கி, துணை நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடர்ந்து இடைக்காலத் தடை வாங்கினார்.
அந்தத் தடையை நீக்க கேரள தோட்டப் பயிர் வாரியம் வழக்குத் தொடுத்தது. தடை நீக்கப்பட்டது. வேறு வழியில்லாமல், பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்டி நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராடினார் லீலாகுமாரி அம்மா. பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வந்த ஹெலிகாப்டர்களை மக்கள் விரட்டியடித்தனர். மீண்டும் வழக்குத் தொடுத்தார். 18.10.2000 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், எண்டோசல்பான் என்ற நச்சை எங்கும் எதிலும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரு பெண் போராட்டத்தில் இறங்கினால் ஏற்படும் பல்வேறு துயரங்களை விவரிக்கும் இந்நூல், தங்களுடைய லாபத்திற்காக மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் எதையும் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களையும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரவர்க்கத்தின் செயல்களையும் கடுமையாக விமர்சிக்கிறது. சுற்றுச்சூழல் கேடுகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டுகிறது.
நன்றி: தினமணி,27/9/2018
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818