மனதைத் தொட்ட சில நிகழ்வுகள்

மனதைத் தொட்ட சில நிகழ்வுகள், சி.இரத்தினசாமி, வசந்தா பிரசுரம், பக். 136, விலை 100ரூ.

ஒரு விஷயத்தை ஒருவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த, கதை மூலம் ஒரு விஷயத்தை சொல்வது மிக சிறந்த வழி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, கதை கேட்பதிலும், படிப்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில், வாழ்வியல் தத்துவங்கள், வாழ்க்கையின் செயல்பாடுகள் ஆகியவற்றை தமிழ் மணத்துடன், அழகுற, எளிய நடையில், சிறு சிறு கதைகளாக தொகுத்து, ஆசிரியர் தந்துள்ளார். இந்த கதைகளை படித்த போது, அந்த கதாபாத்திரங்கள், நம் மனதில் நிழலாடுவதை உணர முடியும்.

குறிப்பாக, ‘சபதம் நிறைவேறியது’ சிறுகதை, எந்த காலத்துக்கும் பொருந்த கூடியது. அதில் வரும் ஜாதி கொடுமைகள், இன்றும் பல கிராமங்களிலும் நீடிப்பது பெரும் வேதனை. ஜாதி தகராறில், தன் மகனை கொன்றவனை பாதுகாத்து, அவனை உயிருடன் தப்பிக்க வைக்கும் ஏடலிங்கம், நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

மனிதனின் பேராசை குணத்துக்கு, ’நாட்டிய குதிரை’ கதையை படிததால் போதும், ஆசை அறவே நீங்கிவிடும். நம் கலாசாரத்தின் மீது ஆசிரியருக்கு உள்ள பற்றை, ‘வேரை காப்போம்’ சிறு கதையில், லாவண்யா கதாபாத்திரம் மூலம் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்.

இப்படி ஒவ்வொரு கதையும் சிறப்பாக உள்ளது. குழந்தைகளும் படிக்கலாம் எனக் கூறும் அளவுக்கு, சற்றும் விரசம் இல்லாமல், ஆசிரியர் எழுதியிருப்பது மிக சிறப்பு.

–ச.சு.,

நன்றி: தினமலர், 3/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *