மனோவசியம்
ஹிப்னாசிஸ்(ஆங்கிலம்), பெர்னாண்டஸ், மனோவசியம், டாக்டர் எம்.பீட்டர், லிப்கோ பப்ளிஷர்ஸ், பக். 310, விலை 300ரூ.
கலவரப்படுத்தும் வார்த்தை மனோவசியம்
ஹிப்னாடிசம் (மனோவசியம்) – சற்றே நம்மை கலவரப்படுத்தும் வார்த்தை. மனோவசியம் மூலம் நாம் மற்றவரின் கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக சென்று விடுவோம் என்ற அச்சம் பொதுவாக நமக்கு உண்டு. அதனாலேயே, ஹிப்னாடிசம் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
ஹிப்னாடிசம் , ஹிப்னோதெரபி என்பதெல்லாம் நேர்மையான செய்கை கிடையாது என்ற அபிப்ராயம் பொதுவாக இருப்பதால், பெரும்பாலான மனோதத்துவ நிபுணர் இதை ரகசியமாக பயன்படுத்தினர். 1958ல்தான் ‘ஹிப்னாடிசம்’ ஒரு மருத்துவ முறையாக அங்கீகரிக்கப்பட்டது.
இன்றைய நிலையில், பெரும்பாலான மன, நரம்பியல் நோய்களுக்கு மருந்தே அவசியம் இல்லை. மிக எளிமையான ஹிப்னாடிசத்தில் குணப்படுத்த இயலும். இதயக் கோளாறுகள், ஜீரண மண்டல பிரச்னைகள், தோல் வியாதிகளையும் இந்த முறையில் குணப்படுத்த முடியும்’ என்கிறார் நூலாசிரியர்.
மனநல மருத்துவத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ள டாக்டர் பீட்டர் பெர்னாண்டஸ், இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர், டாக்டர் சாரதா மேனனின் மாணவர். அவரிடம் 16 ஆண்டுகள் பயிற்சி பெற்றவர். ‘ஒவ்வொரு மனநல மருத்துவரும் இந்த ஹிப்னாடிசம் பயிற்சி பெற்று, முடிந்த அளவு மருந்தில்லாமல் நோய்களை குணப்படுத்த வேண்டும்’ என, அணிந்துரையில் குறிப்பிடுகிறார் டாக்டர் சாரதா மேனன்.
கடந்த, 1957ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்தபோது, இரண்டுமணிநேரம் சுயநினைவிழந்த பெண்ணுக்கு இந்த முறையை பயன்படுத்தி சரி செய்ததையும், நூலின் இறுதியில் பதிவு செய்து இருக்கிறார். நூலின் இறுதியில் ஹிப்னாடிசத்தின் சாராம்சத்தை தமிழிலும் தந்துள்ளார் நூலாசிரியர். மருத்துவர்கள் மட்டுமின்றி, அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
-கீதா.
நன்றி: தினமலர், 4/9/2016.