கனவோடு நில்லாமல்
கனவோடு நில்லாமல், முனைவர் ஜெ. சதக்கத்துல்லாஹ், வானதி பதிப்பகம், பக். 204, விலை 150ரூ.
உச்ச நீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.இப்ராஹிம் கலிஃபுல்லா, தமிழ்நாடு வேள்ண்மைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் கே.கே.கிருண்ணமூர்த்தி, கவிக்கோ அப்துல் ரகுமான்.. போன்றோர் இந்நூலுக்கு அளித்துள்ள அணிந்துரைகளே இந்நூலின் தகுதிக்குச் சான்றுகள்.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்து, ஏழ்மையில் உழன்று, தனது ஏழைத்தாயின் தினக் கூலியில் கல்வி கற்று, தன் சீரிய முயற்சியால் ஒவ்வொரு தடையையும் தாண்டி, இன்று ரிசர்வ் வங்கியின் தென் மண்டல (தமிழ்நாடு – பாண்டிச்சேரி) இயக்குனராக பிரகாசிக்கும் இந்நூலாசிரியர், எனக்கும் பரிச்சயமானவரே!
என் ஊரைச் (ராஜகம்பீரம்) சேர்ந்த இவர், இன்றைய இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியானவர்தான் என்பதை என் சிறுவயது முதல் அறிந்துள்ளேன். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு ஏற்ப, தான் எப்படி இந்த உயர்வை அடைய முடிந்தது என்பதை தனது வாழ்க்கையின் நிகழ்வுகளை படிப்படியாக விளக்குவதன் மூலம், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும், விடா முயற்சியையும் தோற்றவிக்கிறார்.
இறை நம்பிக்கை, தாய் – தந்தை விசுவாசம், பெரியோர்களை மதித்தல், நண்பர்களிடம் பழகும் விதம், வேலையில் காட்டும் பொறுப்பு, படிப்பில் காட்டும் ஆர்வம்… என்று பல விஷயங்களையும் தன் அனுபவங்களைக் கொண்டு எளிய நடையில், படிக்க ஆர்வத்தை தூண்டும் வகையில் எழுதியுள்ளது சிறப்பானது.
‘கனவு காணுங்கள்’ என்கிறார் அப்துல் கலாம். இவரோ அதை நனவாக்குங்கள் என்று இளைஞர்களை தூண்டிவிடுகிறார். தவிர, வங்கியின் நடைமுறைகள், வங்கித் தேர்வில் வெற்றி பெறுவது …. போன்ற வங்கி வேலைவாய்ப்பு பற்றிய நூலாசிரியரின் உரையாடல் தொகுப்பு DVD ஒன்றும் இலவசமாக நூலுடன் அளிக்கப்படுவது பாராட்டத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 7/9/2016.