மதுவிலக்கு அரசியலும் வரலாறும்

மதுவிலக்கு அரசியலும் வரலாறும், ஆர். முத்துக்குமார், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 200, விலை 150ரூ.

பாயும் மது; பதுங்கும் அரசு

சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல; மதுவை ஒரு முறை தொட்டுவிட்டால் சகல அதிகாரங்களையும் கொண்ட அரசாங்கமும் தள்ளாட ஆரம்பித்துவிடுகிறது. ராஜாஜி தொடங்கி ஓமந்தூரார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று ஆட்சியாளர்கள்தான் மாறினார்களே ஒழிய, மதுவின் ஆதிக்கம் தமிழகத்தில் குறைந்தபாடில்லை.

இத்தனைக்கும் விடுதலைப் போராட்டக் காலத்திலேயே அதன் ஒரு பகுதியாக, மதுவுக்குடிடடிபடி09கஉ எதிரான போராட்டங்களும் தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட, 100 ஆண்டுகளைக் கடக்கப்போகிறோம். இருந்தும் மதுவை இன்றுவரை ஏன் விரட்ட முடியவில்லை நம்மால்?

கடந்த 1980ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வரானதைத் தொடர்ந்து, அமைச்சர் நெடுஞ்செழியன், சட்டசபையில் உரையாற்றியபோது, ‘மதுவிலக்கு கொள்கை தோல்வியடைந்து விட்டதை ஒப்புக்கொள்கிறோம்’ என்று பகிரங்கமாக அறிவித்தார். ‘ஆனால் அந்தத் தோல்விக்கு நாங்கள் மட்டும் காரணமல்ல’ என்றொரு விளக்கமும் அளித்தார்.

‘புத்தர் முயன்று பார்த்தார், முடியவில்லை. மகாவீரர் முயன்று பார்த்தார், முடியவில்லை; வள்ளுவர் முயன்று பார்த்தார், முடியவில்லை; நாயன்மார்கள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை; ஆழ்வார்கள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை; பட்டினத்தடிகள், இராமலிங்க அடிகள் முயன்று பார்த்தார்கள், முடியவில்லை; மகாத்மா காந்தியடிகளும் முயன்று பார்த்தார், முடியவில்லை;

பெருந்தலைவர் காமராஜர் முயன்று பார்த்தார், முடியவில்லை; பேரறிஞர் அண்ணா அவர்கள் முயன்று பார்த்தார், முடியவில்லை’. மதுவுக்கு அடிமையானோர், அதிலிருந்து விடுபடாமல் இருப்பதற்குச் சொல்லும் அதே காரணம்தான் இதுவும். ‘முயன்றோம், முடியவில்லை’ எனில், நிரந்தரபோதையில் தமிழகத்தை மூழ்கடித்துவிட வேண்டியதுதானா?

மூலைக்கு மூலை பெருகிப் போயிருக்கும் டாஸ்மாக் கடைகளைக் கண்டும் காணாமல் இருந்துவிட வேண்டியதுதானா? தமிழகத்தின் எதிர்காலம் கண்முன்னால் சிதைந்து கொண்டிருப்பதை வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கெண்டிருக்க வேண்டுமா நாம்?

இந்த நூல், ராஜாஜி காலம் தொடங்கி இன்றைய தேதி வரையிலான, ஒரு விரிவான வரலாற்றுப் பின்னணியில், மதுவிலக்கின் பின்னணியை ஆராய்கிறது. மதுவிலக்கை முன்வைத்து நடைபெற்ற ஆட்சி மாற்றங்கள், மதுவிலக்கு அமலில் இருந்தபோதெல்லாம் நேர்ந்த சிக்கல்கள், தளர்த்தப்பட்ட போதும் முற்றாகக் கைவிடப்பட்ட போதும் நிகழ்ந்த மாற்றங்கள் ஆகியவற்றை இந்த நூல், விரிவாகப் பதிவு செய்துள்ளது. மதுவிலக்குக்கு ஆதரவான போராட்டங்கள், எதிரான விமர்சனங்கள், வெவ்வேறு சமயங்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் நிகழ்ந்த அறிக்கை யுத்தங்கள், அடிக்கடி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட அரசியல் தலைவர்கள் என்று பல முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் இந்த நூலில் உள்ளன.

‘அந்நிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்து மட்டுமல்ல, மதுவின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்க வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் காந்தி.

‘ஏதுமற்றோராக இருக்கும் மக்கள், மதுவுக்குச் செலவிழக்கத் தொடங்கிவிட்டால், உணவுக்கும் உடைக்கும் எப்படிப் பணம் மிச்சமிருக்கும்’ என்பது அவர் கேள்வி. இந்த எளிய தர்க்கத்தை நீட்டித்துச் சென்ற அவர், ‘மது போன்ற போதைப் பொருள்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து ஓர் அரசு இயங்குவது அறமல்ல’ என்றும் அறிவித்தார்.

இன்று தமிழகத்தில், வயது வேறுபாடின்றி பாதிக்கும் மேற்பட்டோர், மதுவுக்கு அடிமையாகி இருக்கின்றனர். இருந்தும், ஜெயலலிதா அரசு, இலக்கு நிர்ணயித்து, டாஸ்மார்க் கடைகளை அதிகரித்து வருகிறது. உரிமம் கொடுக்கும் முறையில் தொடங்கி, ஏலம், ஒப்பந்தம், மொத்த விற்பனை என்று படிப்படியாக முன்னேறி, இன்று அரசே முன்னின்று, இலக்கு நிர்ணயித்து சில்லறை விற்பனை நடத்திவரும் வரலாற்றை , இந்த நூல் தெளிவாக, கண்முன் நிறுத்துகிறது. இன்று அரசு ஈட்டும் வருவாயின் பெரும் பகுதி, மது வியாபாரத்தில் இருந்தே வருகிறது.

1984ம் ஆண்டு டாஸ்மாக் தொடங்கப்பட்டபோது அதன் ஆண்டு வருமானம் 134 கோடி ரூபாய். இன்று அது, 230 மடங்கு அதிகரித்து, 30,000 கோடியைத் தொட்டுள்ளது. ஓர் அரசுக்கு எது முக்கியம்? வருமானமா, மக்கள் நலனா? முத்துக்குமார் சுட்டிக்காட்டும் அண்ணாவின் ஓர் உரை (பக். 76) முக்கியமானது. ‘நிதிப்பற்றாக்குறை காரணமாக அவதிப்படும் இந்த மாநிலப்பொறுப்பை ஏற்றிருக்கும் எனக்கு, மதுவிலக்கை ரத்து செய்தால் 11 கோடி ரூபாய் வருமானம் வரும் என்ற செய்தியைப் படித்ததும் முதலில் சபலம் தட்டியது.

ஆனால் அந்த 11 கோடி ரூபாயின் பின்னணியில் இருப்பது என்ன என்று ஒரு கணம் சிந்தித்த போது, அழுகின்ற தாய்மார்கள், கவனிப்பாரற்று விடப்பட்ட குழந்தைகள், நலிந்துபோன குடும்பம், இவைதான் எனக்குத் தென்பட்டது!’ என்று சொல்லி வருமானத்தைப் புறக்கணித்து விட்டு மதுவிலக்கை அமல்படுத்தினார் அண்ணா. அந்த அண்ணாவின் பெயரைத் தாங்கி நிற்கும் கட்சி, இன்று தமிழகத்தையே மீளா போதையில் தள்ளியிருக்கிறது. காந்தியின் அறமும் காந்தியவாதி சசி பெருமாளின் மரணமும் இந்த அரசைச் சற்றும் அசைக்கவில்லை.

மது திணிப்புக்கு எதிரான மக்களின் போராட்டங்களும், எதிர்ப்புகளும் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த ஆட்சியில் மதுவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும் பெருகியிருக்கின்றன. ‘

2016 சட்டசபைத் தேர்தலில் மதுவிலக்கு பிரதான பிரச்னைகளுள்ளு ஒன்றாக இருக்கும்’ என்கிறார் முத்துக்குமார்.

இருக்கலாம். ஆனால் ஆட்சி மாற்றம் மட்டுமே மதுவை ஒழித்துவிடாது என்பதுதான் இந்தப் புத்தகத்தின ஒரு வரி நீதி. மக்களின் தொடர்போராட்டம் மட்டுமே தமிழகத்தைப் போதையின் பிடியில் இருந்து விடுவிக்கும்.

ஜாதி, மதம், கட்சி அபிமானம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரண்டு மக்கள் போராட வேண்டியது அவசியம். அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க இந்த நூலையிம் ஓர் ஆயுதமாக மக்கள் ஏந்திக் கொள்ளலாம்.

-எழுத்தாளர் மருதன்.

நன்றி: தினமலர், 3/4/2016

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *