முத்தும் பவளமும்
முத்தும் பவளமும், தொகுப்பாசிரியர் முஹம்மது ஃபுஆத் அப்துல் பாக்கீ, சாஜிதா புக் சென்டர், பக். 944, விலை 400ரூ.
இஸ்லாமிய வாழக்கைக்கு வழிகாட்டியாக இருப்பவை திருக்குர்ஆனும், ஹதீஸும். குர்ஆன் என்பது இறைவன் அருளிய வேதம். ஹதீஸ் என்பது நபிகள் நாயகம்(ஸல்)) அவர்கள் அருளிய வாழ்க்கை நெறி. இஸ்லாமியர்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகள், தனது வாழ்க்கை முறையைக் கொண்டே வழிகாட்டினார்கள். அவற்றின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள்.
இறை நம்பிக்கை, தொழுகை, நோன்பு, தர்மம், வியாபாரம், கல்வி சமூக ஒழுங்கு, சுகாதாரம், குடும்ப வாழ்க்கை, ஆட்சி அதிகாரம், உலக முடிவு நாள், இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம்… என்று அனைத்து விணயங்களைப் பற்றியும் நபிகள் நாயகம் என்ன சொன்னார்கள், எப்படி செயல்பட்டார்கள் என்ற விபரங்களின் தொகுப்பே ஹதீஸ் நூல்கள்.
‘என்னைப் பற்றி யாரும் பொய் கூறாதீர்கள்.பொய் கூறுபவர் நரகத்தில் நுழைவார்’ என்று நபிகள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். எனவே நபிகள் குறித்த செய்திகளில் யாரும் பொய்யுரைத்ததில்லை. ஹதீஸ் நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் புகாரி, முஸ்லிம் ஆகிய இரு பெரும் இமாம்ளால் தொகுக்கப்பட்ட நூல்களே உலக முஸ்லிம்களிடம் மிகவும் பிரசித்திப் பெற்றவை. இந்நூல்கள் சுமார் 1250 வருடங்கள் முன் தொகுக்கப்பட்டவை.
நபிகள் நாயகம் குறித்த ஹதீஸ்கள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும், இந்நூலில் 54 பெரும் தலைப்புகளின் கீழ், 935 சிறு தலைப்புகளின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப சுமார் 1900 நபிமொழிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு விஷயத்திலும், இவ்விரு இமாம்களும் தொகுத்தளித்த ஒத்த கருத்துடைய ஹதீஸ்களின் தொகுப்பே இந்நூல். நூலாசிரியரால் ‘அல்லுவுலுஹவ வல்மர்ஜான்’ என்று அரபு மொழியால் உருவாக்கப்பட்ட இந்நூல், நூ.அப்துல் ஹாதி பாகவி அவர்களால் மிக எளிய நடையில் தமிழாக்கம் செய்து, உறுதியான அட்டையுடன் வெளியாகியுள்ளது. இது தமிழக முஸ்லிம்கள் அனைவரும் படித்து, பாதுகாக்க வேண்டிய அற்புதமான நூலாகும்.
-பரக்கத்
நன்றி: துக்ளக், 10/1/2018.