நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும்
நல்லதங்காள் கதைப்பாடல் – பதிப்பும் ஆய்வும், ஓ.பாலகிருஷ்ணன், அய்யா நிலையம், பக். 136, விலை ரூ.130.
சாதாரண மக்களின் வாழ்க்கை, பண்பாடு, பழக்க, வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவற்றைப் பிரதிபலிப்பவை நாட்டுப்புற இலக்கியங்கள். மன்னரின் மகளாக, மன்னரின் மனைவியாக இருந்த நல்லதங்காளின் வாழ்க்கைக் கதை என்றாலும், சாதாரண மக்களின் வாழ்க்கையையே நல்லதங்காள் கதைப்பாடல் சொல்கிறது.
தொடர்ந்து 12 ஆண்டுகள் மழை பெய்யாததால், பஞ்சம் ஏற்பட்டு, இருக்கும் பொருட்களை எல்லாம் விற்றுத் தின்று, இனி கூலி வேலை செய்தாவது பிழைப்போம் என்றநிலை மன்னர் குடும்பத்துக்கு வர வாய்ப்பில்லை. தனது அண்ணனின் வீட்டுக்கு வரும் நல்லதங்காள் (அரண்மனைக்கு அல்ல) அண்ணனின் மனைவியால் புறக்கணிக்கப்பட்டு தனது ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்வது எல்லாம், சாதாரண மக்களின் வாழ்வில் நடப்பவை. கூட்டுக் குடும்பங்கள் சிதைவுறாத அக்காலத்திலேயே மனித உறவுகள் சிதைந்து போயிருப்பது வியப்பளிக்கிறது.
உலகமயமாக்கம், கணினிமயமாக்கம், தொழில்மயமாக்கம் என இந்த உலகமே இயங்கிக் கொண்டிருந்தாலும் மனதால், செயலால் ஒத்துப்போதல் என்பது உறவுகளிடையே பிணைப்பை உறுதிப்படுத்தும் என்பதையும், அவ்வாறு நிகழாது தனிமனித மனங்களால் உறவுகள் பாதிக்கப்படும்போது, குடும்பச் சிதைவு தவிர்க்க இயலாதது என்பதையும் இக்கதைப்பாடல் உணர்த்துகிறது என்ற நூலாசிரியரின் கருத்து குறிப்பிடத்தக்கது.
நன்றி: தினமணி, 22/1/2018.