சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180.

நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு.

ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன.

நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக் கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள், நாலு பேர் என்ன சொல்வார்கள் என்ற கவலையால் முடிவெடுத்துக் கொள்வதுபோல அபத்தம் வேறில்லை. அந்த நாலுபேர் நாலு நாட்களுக்கு மேல் வம்பாகக் கூட எதையும் பொருட்படுத்துவதில்லை, ஆணாதிக்க மனநிலை பற்றி புகார் செய்யும் பெண்கள் ஆணிடமுள்ள ஆணாதிக்க மனநிலைகளை ஒவ்வொரு நாளும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு அந்த கனியின் இனிப்பு தேவை; முள் தேவையில்லை. அவ்வளவுதான். ஒரு பெண் தன்னுள் உறையும் நிலப்பிரபுத்துவ மனநிலைகளை வென்றுவிட்டாளென்றால் அக்கணமே அவள் விடுதலை பெற்றுவிடுகிறாள் இப்படி வெளிப்படையான பதில்கள் வாசகர்களைக் கவரும்.

இந்நூல் ஒரு வரைபடம். அடர்காட்டில் வழிதேடிச் செல்வதற்குரியது. ஆகவே இது பிறவற்றிலிருந்து மாறுபடுகிறது. பயனுள்ளதாகிறது – இது நூலாசிரியரின் சுய விமர்சனம். வெறும் தற்புகழ்ச்சியில்லை; உண்மையும் அதுதான் என்பதை வாசிப்பு உணர்த்தும்.

நன்றி: தினமணி, 22/1/2018.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *