நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், உரையாசிரியர் துரை.ராஜாராம், நர்மதா, பக். 272, விலை 160ரூ.

பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், கடைச்சங்கப் புலவர்களில் மிகச் சிறந்தவர். சேரமன்னன் செங்குட்டுவனின் இளைய சகோதரரான இவர், கற்புக்கரசி கண்ணகியின் காலத்தில் வாழ்ந்தவர். இக்காப்பியம் கண்ணகியின் கால் சிலம்பின் காரணமாக விளைந்த வரலாற்றை கூறுவதால் இதற்கு சிலப்பதிகாரம் என்று பெயர் வந்தது.

காவிரிப் பூம்பட்டினத்தில் பெருங்குடி வணிகர் மரப்பில் தோன்றிய கண்ணகி கோவலனின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இக்காவியத்தில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும் விரவிக் கிடக்கின்றன. தவிர, சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு என்ற தமிழகத்தின் முப்பெரும் நாடுகளின் பெருமைகளையும் அவற்றின் தலைநகரங்களான பூம்புகார், மதுரை, வஞ்சி ஆகியவற்றின் சிறப்புகளையும், அவற்றை ஆண்ட முப்பெரும் மன்னர்களின் ஆட்சிமுறைகளையும் எடுத்துக் கூறுகின்றது. தவிர, அக்காலத்திய மக்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், சமயநிலை, வாணிபம், நற்பண்புகள்… போன்றவற்றையும் திறம்படக் கூறுகின்றது.

இந்நூலில் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் என்ற மூன்று பெரிய பிரிவுகளும், உட்பிரிவுகளாக முப்பது காதைகளும் கொண்டவை. தவிர, அறநெறி தவறிய அரசனை அறக்கடவுளே யமனாக நின்று அழிப்பது, பற்படைய மகளிரை இவ்வுலகத்தார் மட்டுமல்லாது வானோரும் போற்றுவது, ஊழ்வினை எவரையும் விடாது – ஆகிய முப்பெரும் நீதிகளையும் இந்நூல் விளக்குகிறது. ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதியாரே இக்காவியத்தை வாயாரப் புகழ்ந்துள்ளார்.

அத்தகைய காவியத்தை தமிழ் வித்வானும், டாக்டர் பட்டம் பெற்ற வருமான இந்நூலாசிரியர் முழுமையாக எளிய உரைநடையில், அனைவரும் படித்து மகிழும்படி இந்நூலை இயற்றியுள்ளது பாராட்டத்தக்கது.

-பரக்கத்.

நன்றி:துக்ளக், 15/5/19.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000006579.html

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *