பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க

பல்லாண்டு காலம் நலமுடன் வாழ்க,  டாக்டர் வ.செ.நடராசன், வானதி பதிப்பகம், பக்.88, விலை ரூ.60.

பாப்பாவுக்கு மட்டுமல்ல தாத்தாவுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்கிறார் இந்நூலின் ஆசிரியர். முதியோர் நலத்துறையில் 30 ஆண்டு கால அனுபவம் பெற்ற இவர், முதியோர் நலன் குறித்து சுமார் 30 நூல்களை எழுதியுள்ளார். ‘முதுமையை முறியடிப்போம்’, ‘இதய நலம் காப்போம்’ ஆகிய இரண்டு குறுநூல்களைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிட்டுள்ளார்.

ஒரு மனிதனுக்கு 60 வயதில் இருந்தே முதுமைக் காலம் தொடங்குகிறது. இந்தக் காலத்தில் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணிக் காத்துக் கொண்டால், முதுமையை வசந்த காலமாக மாற்றலாம் என்ற கருத்தை இந்த நூல் வலியுறுத்துகிறது.

தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள், அவசரத் தொடர்புக்கான தொலைபேசி எண்கள் ஆகியவை அடங்கிய அடையாள அட்டையை வெளியே செல்லும் முதியோர் கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்பன போன்ற பயன் தரும் தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

முதியோர் பின்பற்ற வேண்டிய உணவு முறை, முதியோர் தொடர்பான நோய்கள், மருந்தில்லா மருத்துவம், இதய நலம், உடற்பயிற்சிகள், முதியோருக்கான தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மருத்துவர் ஆலோசனையில்லாமல் முதியோர் தாமாகவே மருந்துகளை உட்கொள்வது தற்கொலைக்குச்சமம் என்கிறார் நூலாசிரியர்.

குறைவான பக்கங்களில் முதியோருக்குப் பயன் தரும் அதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அறுபது வயதைத் தாண்டியவர்களும், முதியோரைக் கவனித்து வரும் இளையவர்களும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.

நன்றி: தினமணி, 20/11/2017,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *