பாலாற்றங்கரை தெய்வங்கள்
பாலாற்றங்கரை தெய்வங்கள், ப்ரியன், திருவரசு புத்தக நிலையம், பக். 136, விலை 80ரூ.
இந்நூலாசிரியர் கல்கிப் பத்திரிகையில் எண்ணற்ற அரசியல் கட்டுரைகள், பேட்டிகள் என்று சுமார் 35 வருடங்கள் எழுத்துப் பணியாற்றியவர். தவிர, ‘கல்கி’ குழுமத்தின் ‘தீபம்’ என்ற ஆன்மிக இதழில் ‘பாலாற்றங்கரைத் தெய்வங்கள்’ என்ற தலைப்பிலேயே, இவர் எழுதிய திருத்தலங்களைப் பற்றிய கட்டுரைகள் வாசகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
இந்தியாவில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, காவிரிஆகிய ஏழு நதிகள் புண்ணிய நதிகள் என்று ஆதிசங்கரரால் பாராட்டப்பட்டவை. அதேபோல் கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் சுமார் 200 கி.மீ. தூரத்திற்கு வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை… என்று நான்கு மாவட்டங்களில் பாய்ந்து வரும் பாலாறு குறித்து காஞ்சி மகாப்பெரியவர் உட்பட பல மகான்களும், இதுவும் புண்ணிய நதிதான் என்பதற்கான சான்றுகளைக் கூறியுள்ளனர்.
தவிர, இந்தப் புண்ணிய நதி தோன்றிய புராணக் கதையை, விபரத்தையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இப்படிப்பட்ட பாலாற்றின் இரு கதைகளிலும் ஏராளமான சைவ, வைணவ திருத்தலங்களுக்கு இந்நூலாசிரியர் சென்று அவற்றின் தொன்மை, புராணப்பெருமை, சமகாலச் சிறப்பு என்று பல கோணங்களிலும் தகவல்களைச் சேகரித்து, அனுபவபூர்வமாக விளக்கியுள்ளார். குறிப்பாக இந்தப் பாலாற்றின் முக்கிய கோயில் நகரமாக காஞ்சிபுரம் விளங்குகிறது என்பதையும், இங்கே அதிக எண்ணிக்கையிலான கோயில்கள் உள்ளதையும் கூறி, அவற்றின் சிறப்புகளையும் விவரித்துள்ளார்.
இப்படி பாலாற்றின் கரையிலுள்ள சைவ, வைணவ என்று 39 திருத்தலங்களின் சிறப்புகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது, ஹிந்து மதப் பக்தர்களுக்கு பயன் தரத்தக்கது.
-பரக்கத்.
நன்றி: துக்ளக், 13/12/2017.